
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா ஓவியத்தின் திரை விலக்கப்படதோடு தமிழக அரசியல் வி.ஐ.பி.க்கள் சிலரின் முகத்திரையும் உரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்...
இதுபற்றி மேலும் பேசும் அவர்கள் “குற்றவாளி என்று மேல் முறையீட்டு மனுவிலும் தீர்ப்பை பெற்றுவிட்ட ஜெயலலிதாவின் ஓவியமானது சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது மிகப்பெரிய அதிகார அத்துமீறல் என்று விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
இது குறித்து விரிவாக பேசும் அவர்கள், “ஜெயலலிதாவின் பட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், ‘மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உயிர் பிரிந்தது என்கிற தகவலை கேட்ட நொடியில் நம் உயிர் உடலை விட்டு கழன்று விழுந்தது போன்றதொரு துயரம் ஏற்பட்டது. அம்மா அவர்கள் தனது ஆளுமையால் மீண்டும் கொண்டு வந்த இந்த ஆட்சிக்கு கயவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சிய நேரத்தில் அது தொடர்ந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறது...’ என்றெல்லாம் உருக்கமாய் பேசினார்.
எப்படி பன்னீர்செல்வத்தால் பழைய உண்மையையும், தன் மனசாட்சியையும் மறைத்துவிட்டு பேச முடிகிறது? என்று புரியவில்லை. உடல் நிலை முடியாத சூழலிலும் ஜெயலலிதா கடும் பிரச்சாரம் செய்து அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தார் என்பது வரலாறு. ஆனால் ஜெ., மரணத்துக்குப் பின் ஏற்பட்ட குழப்பத்தால் முதல்வர் பதவி பறிக்கப்பட்ட பன்னீர்செல்வம் ‘தர்ம யுத்தம்’ எனும் பெயரில் கட்சிக்குள் உள்கலகத்தை துவக்கினார்.
இதன் உச்சமாக அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததோடு, ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அ.தி.மு.க. ஆட்சியை ‘மக்கள் விரோத அரசு’ என்பதில் துவங்கி மிக கேவலமாகவும், மோசமாகவும் விமர்சித்து தள்ளினார். பிறகு எடப்பாடியுடன் சமரசம் செய்து ஆட்சியில் துணை முதல்வர் பதவியும், கட்சியில் பதவியும் பெற்று செட்டிலாகியிருக்கிறார்.
ஆனால் இந்த ஆட்சி கவிழ வேண்டும் எனும் உணர்வுடன், நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்ப்பு வாக்களித்த பன்னீர் இன்று அதே சட்டசபையில் நின்று கண்ணீர் வடிப்பது போல் பேசுவது எப்படி முடிகிறது? கூச்சநாசமில்லாமல் எப்படி இப்படி சந்தர்ப்பவாதமாய் செயல்பட முடிகிறது?” என்று விமர்சிக்கின்றனர்.
நியாயமான கேள்விதானோ?!