
மகாராஷ்டிரா மாநில பா.ஜனா அரசுக்கு அளித்துவரும் ஆதரவு தற்காலிகமானதுதான் என, சிவசேனா கட்சி அறிவித்து உள்ளது.
கூட்டணி முறிந்தது
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பா.ஜனதா-சிவசேனா கட்சிகளுக்கு இடையே கடந்த 25 ஆண்டு காலமாக இருந்துவந்த கூட்டணி முறிந்துவிட்டது.
இருப்பினும், தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு அளித்துவரும் ஆதரவை சிவசேனா இன்னும் விலக்கிக்கொள்ளவில்லை.
தற்காலிகமானதே
இந்த நிலையில், பா.ஜனதா அரசுக்கு அளித்துவரும் ஆதரவு தற்காலிகமானதுதான் என்று, சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது-
‘‘மகாராஷ்டிரா முதல்-அமைச்சர் பட்நாவிஸ்சின் பதவி தற்போது சிவசேனாவின் ஆதரவில்தான் இருந்து வருகிறது. அவருடைய எதிர்காலமே நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது, மும்பை குறித்து நாள்தோறும் அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
ஓட்டுப்பிச்சை
மும்பையின் எதிர்காலத்தை மாற்ற விரும்பவுவதாக கூறும் அவருக்கு நான் சொல்ல விரும்புவது எல்லாம். சிவசேனா அளித்து வரும் தற்காலிக ஆதரவு, மகாராஷ்டிரா மாநிலம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
பா.ஜனதா ஏற்கனவே போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது என்ற உண்மையை உணர்ந்துதான் முதல்வர் பட்நாவிஸ் மும்பையில் வீதி வீதியாக சென்று மக்களிடம் ‘ஓட்டுப் பிச்சை’ கேட்டு வருகிறார்.
கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது’’.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் முடிவு கணிப்பு
போலியான தேர்தல் முடிவு கணிப்புகளை வெளியிட்டு மக்களிடம் பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பா.ஜனதாவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்ய தாக்கரே குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது போன்ற பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பை உள்பட 10 மாநகராட்சிகளில் இன்று தேர்தல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் இன்று (செவ்வாய்) தேர்தல் நடைபெறுகிறது. ‘மினி’ பொதுத் தேர்தல் போன்ற இந்த தேர்தலில் ஏறத்தாழ 1.94 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இருக்கிறார்கள்.
அத்துடன் 11 ஜில்லா பரிஷத் அமைப்புகளுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த 16-ந்தேதி 15 ஜில்லா பரிஷத்துகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
பா.ஜனதா-சிவசேனா இடையே கூட்டணி முறிந்துவிட்டதால், இரு கட்சிகளின் பரஸ்பர தாக்குதல் இந்த தேர்தலில் வழக்கத்துக்கு மாறான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கட்சிகளுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா ஆகிய கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் உள்ளன.