நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் - வைகோ அறிவிப்பு!!

First Published Aug 8, 2017, 12:36 PM IST
Highlights
protest against neet says vaiko


கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த கோரி பிரம்மாண்ட போராட்டம் நடந்தது. அதை தொடர்ந்து நெடுவாசல், கதிராமங்கலம் உள்பட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போது, மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து மதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் என்ற தேர்வு நடத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கை நடைபெறும் வகையில் அந்த தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படும் என்பதால் அந்த தேர்வுக்கு தமிழகம், புதுவை எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை. மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து மாணவர்களும், பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்துக்கு விலக்கு தர கோரியும் மதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 10-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!