
மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்த கர்நாடக மாநில மதுவிலக்கு குழுவினர் மாநிலத்தில் மதுவிலக்கு எப்படி கடைபிடிக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு அறிந்தனர்.
பீகார் மாநிலத்தில் மகா கூட்டணி அமைத்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் அங்கு முதல்வராகப் பதவி ஏற்ற சில மாதங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார்.
இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் வந்தபோதும், அதை தீவிரமாக செயல்படுத்தினார். இதனால் அங்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்த கர்நாடக அரசு தங்கள் மாநிலத்திலும் மதுவிலக்கை கொண்டு வருவது குறித்து ஆலோசித்துள்ளது. பீகாரில் மதுவிலக்கு எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய கர்நாடக அரசு சார்பில் 31 பேர் கொண்ட குழு பீகாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கர்நாடக மாநில மதுவிலக்கு வாரியத்தின் தலைவர் எச்.சி. ருத்ரப்பா தலைமையில் 31 உறுப்பினர்கள் பாட்னா சென்று முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்து பேசினார்கள்.
அப்போது, கர்நாடக மாநில பிரதிநிதிகளிடம் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், “ மதுவிலக்கு என்பது மிகப்பெரிய இயக்கம். இதை நடைமுறைப்படுத்தியபின், மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. அடுத்த கட்டமாக சிறுகுழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்கவும், வரதட்சணை முறையை தடுக்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்கான சட்டங்களும் வகுக்கப்படும். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்றால், மனதில் உறுதியுடன் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.