பிரியங்கா பேரவை... காங்கிரஸில் புதிய கோஷ்டி உருவாகிறது?

By Asianet TamilFirst Published Feb 1, 2019, 4:38 PM IST
Highlights

கோஷ்டிகள் நிறைந்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக ‘பிரியங்கா பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கும் பணியில் சில காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோஷ்டிகள் நிறைந்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக ‘பிரியங்கா பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கும் பணியில் சில காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோஷ்டிகளுக்கு பெயர் போனது தமிழக காங்கிரஸ். இந்தக் கட்சியில் தலைவர்களுக்கும் கோஷ்டிகளுக்கும் பஞ்சமே இல்லை. தேர்தல் தொடங்கி கட்சிப் பணிகள் வரை அனைத்திலும் கோஷ்டிகளின் தாக்கம் நிறைந்திருக்கும். கோஷ்டிகளுக்கு சீட்டு, கட்சிப் பதவி என காங்கிரஸ் மேலிடம் ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு கோஷ்டி புகழ் இங்கே உச்சம். காங்கிரஸ் கோஷ்டிகளைப் பற்றி ஏன் இந்தப் புராணம் என்றுதானே நினைக்கிறீர்கள்? விஷயம் இருக்கிறது.

 

தமிழகத்தில் ‘பிரியங்கா பேரவை’ என்ற பெயரில் புதிய கோஷ்டியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ்காரர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ‘பிரியங்கா அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம்’ என்ற அமைப்பை காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கர் என்பவர் தொடங்கினார். இந்தச் சங்கத்துக்கு உறுப்பினர்களையும் சேர்த்தார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அமைப்பு அப்படியே அமுங்கிப்போனது. 

பிரியங்கா தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்திருப்பதால், மீண்டும் அந்த அமைப்பை தூசுத் தட்டி கையில் எடுக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். முந்தைய பெயரைப்போல அல்லாமல், ‘பிரியங்கா பேரவை’ என்ற பெயரில் இந்த அமைப்புக்கு உயிர் கொடுக்க காங்கிரஸில் சிலர் முயற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். 

காங்கிரஸில் ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள். நிர்வாகிகளை ஒருங்கிணைத்து இந்தப் பேரவையை வலுவாக உருவெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கவே தமிழக காங்கிரஸில் ஏராளமான கோஷ்டிகள் உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘பிரியங்கா பேரவை’ என்ற பெயரில் புதிய கோஸ்டி உருவாகும் என்ற பரபரப்பு காங்கிரஸ்காரர்கள்  மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. 

click me!