பிரைவேட் பஸ்செல்லாம் லாபம் பாக்குது… அரசுப் பேருந்துக்கு மட்டும் எதற்கு நஷ்டம் வருது ? தமிழிசை தடாலடி கேள்வி …

First Published Jan 8, 2018, 8:36 AM IST
Highlights
Private buses are profitable What is the loss of the government bus only


4 பஸ்கள் வைத்திருக்கும் முதலாளிகள் கூட நல்ல லாபம் ஈட்டும்போது 40 ஆயிரம் பேருந்துகளை இயக்கும் அரசு ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது ?  என தமிழக பாஜக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊதிய உயர்வு  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போக்குவரத்துத் தொழிலாளர்கள்  கடந்த 5 நாட்களாக  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றமும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் சட்ட விரோதமானது என்றும் அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும்  உத்தரவிட்டது.

ஆனாலும் சீதிமன்ற உத்தரவை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது மக்களும், பயணிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழக  அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து சமாளித்து வருகிறது. அரசுக்கும், தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமுமின்றி இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது டுவிட்டரில் நான்கு பஸ்களை மட்டுமே இயக்கும் தனியார் நிறுவன முதலாளிகள் லாபம் பார்க்கும்போது, தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கும் அரசு, நஷ்டத்தில் இயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் .போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் எனவும்  . பஸ்களை அரசுடைமை ஆக்கி, நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனையா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கிவரும் போக்குவரத்து துறையை சீரமைக்க, தொழிலாளர்களை அதில் பங்குதாரர்களாக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் தமிழிசை அரசுக்கு அட்வைஸ் பண்ணியுள்ளார்.

click me!