
உத்தர பிரதேசத்தில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு பிரதம மந்திரி பக்கோடா பயிற்சி மையத்தில் பக்கோடா செய்யும் பயிற்சியை சமாஜ்வாதி கட்சி வழங்கியுள்ளது.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன.
அதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதனால் அந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, மோடி அலை உள்ளிட்ட பல காரணங்கள், பாஜகவின் வெற்றிக்கு காரணம். இவையனைத்தையும் விட மிக முக்கிய காரணம் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்.
விவசாயத்திற்கு முன்னுரிமை, வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கவர்ச்சியான வாக்குறுதிகள் மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றன. ஆனால், பாஜக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், வேலைவாய்ப்பு போதுமான அளவுக்கு உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில், அண்மையில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர், இந்த சேனலின் வாசலில் நின்று பக்கோடா விற்றால் கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கலாம். அதுவும் முன்னேற்றம் தானே என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்து மாணவர்களிடையேயும் பட்டதாரிகளிடையேயும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிரதமர், அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்துள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தின் பரேலி பகுதியில் பிரதம மந்திரி பக்கோடா பயிற்சி மையம் என்ற பெயரில், பட்டதாரி இளைஞர்களுக்கு பக்கோடா செய்யும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் அடா-உர்-ரஹ்மான், இந்தப் பயிற்சி வகுப்பில் பட்டதாரிகளுக்கு நான்கு விதமான பக்கோடாக்கள் செய்ய பயிற்சி வழங்கப்பட்டது. பி.டெக்., எம்.டெக்., பட்டதாரிகளுக்கு மோடி பக்கோடாவும், எம்.பி.ஏ. மற்றும் பி.எச்.டி பட்டதாரிகளுக்கு அமித்ஷா பக்கோடாவும், எம்.காம் முடித்தவர்களுக்கு அருண் ஜேட்லி பக்கோடாவும் சமைக்க கற்றுத்தரப்பட்டது.
அதேபோல, பட்டப்படிப்பு முடித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு யோகி பக்கோடா செய்ய சொல்லித்தரப்பட்டது. சமாஜ்வாதி கட்சியில் இருப்பவர்களுக்கு பக்கோடா செய்வதில் போதுமான அனுபவம் இல்லாதபடியால், மூன்று தலைசிறந்த சமையல்காரர்களை அழைத்து வந்து இந்த பயிற்சி வழங்கப்பட்டது என தெரிவித்தார்.