
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை விரைவில் தேர்வு செய்து அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏதுவான இடங்களாக தமிழக அரசு 5 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு 31.10.2014-ல் பட்டியல் அனுப்பப்பட்டது. இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. ஆனால், இவற்றில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
2018ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாததால், மத்திய சுகாதாரத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலர் வரும் 12ம் தேதி பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கோரிக்கை விடுத்தும், நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தை மத்திய அரசு இதுவரை தேர்வு செய்து அறிவிக்கவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏதுவான இடங்கள் பட்டியலை தமிழக அரசு, கடந்த 2014ம் ஆண்டே சமர்ப்பித்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை தேர்வு செய்து அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என இந்த வழக்கை தொடர்ந்த கே.கே.ரமேஷ் என்பவருக்கும் பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திலிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.