பாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு... ‘தர்பார்’ ரஜினிக்கு பிரதமர் மோடி நன்றி!

By Asianet TamilFirst Published Apr 13, 2019, 7:49 AM IST
Highlights

பாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

 நடிகர் ரஜினி காந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், பாஜக தேர்தல் அறிக்கையைப் பாராட்டியிருந்தார். “நதிகள் இணைந்தால் நாட்டில் வறுமை போய்விடும். நதிகள் இணைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை வரவேற்கிறேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ‘பகீரத்’ என்று பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் ஏற்கனவே தெரிவித்தேன். கடவுள் ஆசிர்வாதத்தால், பாஜக கூட்டணி மத்தியில் அமைந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.


ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு பற்றி விளக்கம் அளித்த ரஜினி, “நதி நீர் இணைப்புக்கு நல்ல யோசனையை வைத்திருக்கும் கட்சியை ஆதரியுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.  இந்தப் பேட்டியின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவை பாஜகவுக்கு மறைமுகமாக தெரிவித்திருப்பதாகப் பேசப்பட்டுவருகிறது. பாஜக தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிக்கு மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நன்றி தெரிவித்திருந்தார். இதேபோல ரஜினிக்கு அதிமுக, பாஜகவினர் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள். 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மோடி, “பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்றதற்காக நான் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளைக் கூற அவர் யோசிப்பார். ஆனால், இந்த விஷயத்தில் ரஜினி கருத்து கூறியிருப்பது மகிழ்ச்சி. ரஜினி மிகப்பெரிய நடிகர். அவர் சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்னையைப் பேசியிருப்பது நல்ல விஷயம். அதற்கு நான் நன்றியை கூறுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் நரேந்திர மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

click me!