
மக்களின் நலனுக்காக பத்திரிகை சுதந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தினத் தந்தி நாளிதழின் 75-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, பத்திரிகை சுதந்திரம் பற்றியும் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் உதவும் வகையில் ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு கருத்துகளை பேசினார். சுதந்திரத்திற்கு முன் தொடங்கி நவீன காலம் வரையிலான பத்திரிகைத்துறையின் செயல்பாடுகளையும் நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்தும் பிரதமர் பேசினார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், மக்களிடையே சுதந்திர கருத்தை பரப்ப பத்திரிகைகள் பயன்பட்டன. அதிலும் குறிப்பாக பிராந்திய மொழி பத்திரிகைகளின் செயல்பாட்டைக் கண்டு ஆங்கிலேயர்களே அஞ்சினர்.
இவ்வாறு சுதந்திரத்திற்கு முன்பாக சுதந்திரம் அடைவதற்கான பணிகளை பத்திரிகைகள் செய்தன. சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு வகைகளில் பத்திரிகைகள் பணியாற்றியுள்ளன.
மக்களின் எண்ணங்களை பத்திரிகைகள் பிரதிபலிப்பதன் மூலம் மக்களுக்குத் தேவையான திட்டங்களை அரசால் செயல்படுத்த முடிகிறது. செய்தித்தாள்கள், தினசரி செய்திகளை மட்டும் வழங்குவதில்லை. மக்களிடையே அறிவை வளர்க்க உதவுகிறது.
தொழில்நுட்பம் ஊடகத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் நம்பகத்தன்மையை வளர்க்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மக்களின் நலனுக்காகவும் ஊடகங்கள் செயல்பட வேண்டும்.
சமூகத்தின் மனசாட்சியாக ஊடகத்துறையினரின் பேனா முனை செயல்படுகிறது. சமூக பிரச்னைகளையும் நாட்டின் பிரச்னைகளையும் வெவ்வேறு கோணங்களில் ஊடகங்கள் அணுகுகின்றன.
ஊடகங்கள் தனியாரால் நடத்தப்பட்டாலும் அவை மக்களின் நலனுக்காகவே செயல்படுகின்றன.
பருவநிலை மாற்றம் குறித்தும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன.
ஊடகங்களின் கவனம் முழுவதும் மக்களை சுற்றியும் நாட்டின் நலனை சுற்றியுமே இருக்க வேண்டும். பாமர மக்களின் உணர்வுகளையும் பத்திரிகைகளும் ஊடகங்களும் பிரதிபலிக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரம் என்பது மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பத்திரிகைத்துறை குறித்து பிரதமர் மோடி பேசினார்.