சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்..!! ஜூம் செயலி மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு.

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2020, 5:15 PM IST
Highlights

கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நாளை காலை 9:30 மணிக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

நாளை நடைபெற உள்ள சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

முண்டாசுக் கவி, மகாகவி சுப்ரமணிய பாரதியின் 132 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள வானவில் கலாச்சார மையம் சர்வதேச பாரதி விழாவை  ஒருங்கிணைத்துள்ளது. அந்த விழாவில் நாளை மாலை 4:30 மணிக்கு இணையவழியில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல கவிஞர்களும், கலைஞர்களும் பங்கேற்று பாரதியில் சிறப்பை பறைசாற்ற உள்ளனர். 

கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நாளை காலை 9:30 மணிக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து பாரதியார் இல்லம் வரை பாரதியின் திரு உருவச் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மாலை 4:30  மணி முதல் 5 மணி வரை துவக்க விழா நிகழ்ச்சிகள் இணைய வழியாக நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். 

இந்நிகழ்ச்சியில் பாரதி அறிஞர் சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருது வழங்கி பிரதமர் சிறப்புரை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாரதியாரின் பிறந்த தின விழாவின் தொடர்ச்சியாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். நாளை முதல் 20-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மகாகவி பாரதியின் சிந்தனையை இளம் தலைமுறைக்கு எடுத்துக் கூறும் வகையில் ஆடல், பாடல், சொற்பொழிவு, நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதை ஜூம் செயலி மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!