சென்னை, செங்கல்பட்டு, கோவையில் தொற்று பரவலை தடுப்பது சவாலாக உள்ளது.. கையறு நிலையில் சுகாதாரத்துறை.

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2021, 1:13 PM IST
Highlights

போதிய மருந்துகள் இருப்பு இல்லாததால் 18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசிபோடுவது சந்தேகமே என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

போதிய மருந்துகள் இருப்பு இல்லாததால் 18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசிபோடுவது சந்தேகமே என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மையத்தை பயன்படுத்தி மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் கொண்ட படுக்கை வசதிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றார். 

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தவர், சென்னை தாம்பரத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்த 17 ரெம்டிசிவர் மருந்துகள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கான தடுப்பூசி, உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எப்போது வரும் என தெரியாது என்றும், 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும் அவை எப்போதும் வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார். 

தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். 
சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலை தடுப்பது சவாலாக உள்ளதாக கூறிய அவர், 30 சதவீத நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போதிய படுக்கை வசதிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

 

click me!