டிடிகே பிராண்டு... இனி டிடிவி பிராண்ட் ஆகுமாம்! ரவுண்டு கட்டும் குக்கர் மவுசு...

First Published Dec 9, 2017, 3:00 PM IST
Highlights
pressure cooker is now turned on to ttv product rk nagar round up


பிரஷர் குக்கர், அது நேற்று வரை டிடிகே பிராண்ட். இனிமே அது டிடிவி பிராண்ட். இதுதான் ஆர்.கே.நகரில் வலம் வரும் லேட்டஸ்ட் கோஷம். 

ஆர்.கே.நகரில் பிரபல கட்சிகளான அதிமுக., திமுக., ஆகியவற்றின் வேட்பாளர்களைக் காட்டிலும், அதிகம் பேசப்படும் நபராகிவிட்டார் டிடிவி தினகரன். இந்த பிரபலத்தால் வாக்குகளைப் பெறுகிறாரோ இல்லையோ, வாய்களில் முணுமுணுக்க வைத்துவிட்டார். 

கடந்த முறை இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் நின்றார். ஆனால், தேர்தல் ரத்தானது. அப்போதே, ஆளும் கட்சி கோதாவில், அதிகார பலத்தில் தொகுதி மக்களை நன்றாகக் கவனித்துவிட்டார் என்கிறார்கள். இப்போது அதே தொப்பியில் நின்றால் வசதி என்று நினைத்தவருக்கு, சுயேச்சை ரூபத்தில் வந்தது சிக்கல். பதிவு பெற்ற கட்சியாக இருந்திருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும். ஆனால் சுயேச்சை என்பதால், போராடிப் பார்த்து, பின்னர் ஒருவாறு பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்துவிட்டார். 

அவர் சொன்னது போல் பலரின் பிளர் பிரஷரை எகிறவைத்துக் கொண்டிருக்கிறார். தினகரன் சின்னமான பிரஷர் குக்கர் இப்போது தொகுதியில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் ஹாட் டாபிக் தான்!  

பிரஷர் குக்கரை எத்தனையோ நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஆனாலும், சென்னை நிறுவனமான டிடிகே நிறுவனத்தின் தயாரிப்பு தனி இடம் பெற்றது. மனைவியை நேசிக்கிறவங்க பிரஸ்டீஜை வேணாம்னு சொல்லமாட்டாங்க என்று குழந்தைகள் வரை மனப்பாடமாக சொல்லும் அளவு இடம்பெற்றது. ஆர்.கே.நகரால், இப்போது அது டிடிவி ப்ராண்ட் ஆகிவிட்டது சமூகத் தளங்களில். 

இனி வீட்டுக்கு வீடு பிரஷர் குக்கர் விசிலு சத்தம் கேட்கும் என்று சொல்லும் அளவுக்கு டிடிவி பேசப்படுகிறார். நேற்று வரை அது டிடிகே தயாரிப்பு... இன்று முதல் அது டிடிவி தயாரிப்பு  என்று கேலிகளுக்கும் பஞ்சமில்லை. 

ஒருவேளை அமேசானில் 40 சதவீத தள்ளுபடியில் பிரஸ்டீஜ் குக்கர்களை மொத்தமாக ஆன்லைனில் புக் செய்து, ஆர்.கே.நகரில் வீடுதோறும் தள்ளிவிடாமல் இருந்தால் சரிதான்....! என்று கருத்துகள் முன்வைக்கப் பட,  இலவசமா கொடுத்தால் லஞ்சம். அதனால் பத்து நாட்களுக்கு அண்ணாச்சி கடையில் மெகா தள்ளுபடி. வெறும் 100 ரூபாய் கொடுத்தால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கரே கிடைக்கும்... எப்படி நம்ம திட்டம் நல்லாருக்கா என்று கேலிகளும் தூள் பறக்கின்றன. 

டிடிவி தினகரன்னா... திரும்ப திரும்ப விக்ட்ரி என்று சிலர் கருத்துகளைக் கூறிக்  கொண்டிருக்க, இதே காரணத்தால், யாரேனும் கடைகளில் போய் குக்கர் வாங்கி வந்தாலும், அது வாக்காளருக்கு கொடுக்கப் பட்ட லஞ்சம் என்று கூறி தேர்தலை மீண்டும் ரத்து செய்தாலும் செய்வார்கள் என்று கருத்தை பரப்புகிறார்கள் ஜெயானந்த் திவாகரனின் பேஸ்புக் கருத்தின் பின்னூட்டத்தில்! 

click me!