
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியதை அடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று வர உள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இரண்டு வாரத்துக்குள் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதிநீக்கம் சட்டப்படி செல்லாது என்றும், அவர்கள் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் கூறியுள்ளார்.\
ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்படி செயல்பட்டு உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் 2 வாரத்துக்குள் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கும்வரை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறக் கூடாது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.