மாணவியை நேரில் அழைத்து தங்க பதக்கம் வழங்க வேண்டும்..!! குடியரசு தலைவருக்கு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2019, 12:27 PM IST
Highlights

சமூக நீதி,  ஆகியவற்றுடன் அவர் கல்வி அறிவை வளர்த்து கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.  மற்றவர்களுக்கும் இது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  27- வது பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவி ரபியா  பட்டமளிப்பு விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி அணிந்திருந்த ஹிஜாப் எனும் தலைத் துண்டு காரணமா அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இது குறித்து  மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அறிக்கை  வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:-  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் , மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் முதலிடம் பெற்ற மாணவி ராபியாவுக்கு அடையாள வெறுப்பை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம்.

  அவர் ஜனாதிபதி கையால் தங்கப்பதக்கம் பெற, முன்கூட்டியே அரங்கிற்கு வந்து அமர்ந்துள்ளார்.நிகழ்ச்சிக்கு சில நிமிடங்கள் முன்பு, அவரை அதிகாரிகள் அரங்கிலிருந்து வெளியேற்றியது ஏன்? என்ற கேள்வியை அவரும் எழுப்பியுள்ளார்.இப்போது எல்லோரும் எழுப்புகிறார்கள். இதற்கு அவரது பெயர் ஒரு காரணமா? அவர் அணிந்திருந்த ஹிஜாப் எனும் தலைத் துண்டு காரணமா?  அல்லது இன , மத வெறுப்பு காரணமா?  என்ற கேள்விகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் நேர்மையாக விளக்கமளிக்க வேண்டும். 

இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட அடையாள நெருக்கடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பட்டத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, தங்கப் பதக்கத்தை திருப்பியளித்த ராபியாவின் சுயமரியாதையையும், துணிச்சலையும்  பாராட்டுகிறோம். சுதந்திரம்,  துணிச்சல்,  சமூக நீதி,  ஆகியவற்றுடன் அவர் கல்வி அறிவை வளர்த்து கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.  மற்றவர்களுக்கும் இது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.அதன் பிறகு, அவர் தன் பிரச்சனையோடு மட்டுமின்றி, நாட்டின் இன்றைய தீவிரப் பிரச்சனைகள் குறித்தும்  ஊடகங்களிடம் கவலை தெரிவித்திருப்பது, அவரின் சமூக பொறுப்பையும், அக்கரையையும் வெளிக்காட்டுவதாக இருக்கிறது. 

இதுப் போன்ற பிரச்சனை , இனி யாருக்கும் வரக்கூடாது என்ற அளவில் ஒரு விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி உள்ளார். ஜனாதிபதி அவர்கள் மாணவி ராபியாவை, நேரில் அழைத்து அந்த தங்கப் பதக்கத்தை வழங்கி இப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இதில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தலையிட்டு, இதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து , பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!