
நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அக்கட்சியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததையடுத்து, நாராயணசாமி அரசு பெருபான்மையை இழந்ததாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் பெருபான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார். சட்டப்பேரவையில் வெளியேறிய முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் அரசு அமைக்க எதிர்கட்சிகள் விரும்பவில்லை. மேலும், மாற்று அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரினால் ஒட்டு மொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் கொறடா அனந்தராமன் கூறியிருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால் புதிய அரசு அமைக்க முடியாது.
இதனையடுத்து, ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதுச்சேரியில் குடியரத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரை நேற்று பரிந்துரை செய்திருந்தார். இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.