இதெல்லாம் வெட்கக்கேடு! செல்போனை திருடி பிழைக்கணும்னு அவருக்கு அவசியமில்லை! இபிஎஸ் முட்டுக்கொடுக்கும் பிரேமலதா

By vinoth kumar  |  First Published Mar 14, 2023, 6:56 AM IST

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. பட்டப்பகலில் நடுரோட்டில் படுகொலை, ஏடிஎம் கொள்ளை, செயின் பறிப்பு இவை அனைத்திற்கும் காரணம் டாஸ்மாக் தான்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருதாச்சலத்தில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற  காலத்திலிருந்தே என்எல்சி பிரச்சனை இருக்கிறது  என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்;- அப்பாவி மக்கள் உயிரிழக்கும் ஆன்லைன் மசோதாவுக்கு ஆளுநர் 4 மாதம் காலம் தாழ்த்திவிட்டு மீண்டும் திருப்பி அனுப்பியதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. பட்டப்பகலில் நடுரோட்டில் படுகொலை, ஏடிஎம் கொள்ளை, செயின் பறிப்பு இவை அனைத்திற்கும் காரணம் டாஸ்மாக் தான். தமிழ்நாடு போதையின் தமிழ்நாடாக மாறிவிட்டது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். 

Latest Videos

மேலும், எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டுள்ளார்கள். இதை தலைகுனிவாகவும் வெட்கக்கேடாகவும் பார்க்கிறேன். அவர் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். வழக்கை பதிவு செய்வதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும். கீழ்த்தரமான அரசு நடக்கிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணம். செல்போனை திருடி பிழைக்க வேண்டும் என்று அவருக்கு என்ன வந்தது. முதலமைச்சராக இருந்தவர் மீது முகாந்திரம் கொண்ட வழக்குகள் பதிந்தால் அது சரி. இதுபோன்ற வழக்கு பதிவு செய்வதால் அவர்களுடைய தரத்தை அவர்களே தாழ்த்தி கொள்கிறார் என்று தான் அர்த்தம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருதாச்சலத்தில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற  காலத்திலிருந்தே என்எல்சி பிரச்சனை இருக்கிறது.  என்.எல்.சி சேர்மேனை நானே நேரடியாக போய் சந்தித்து விரிவாக்கம் செய்யக்கூடாது என சொல்லியிருக்கிறேன். மக்களின் விவசாய நிலத்தை எடுத்துக்கொண்டு உரிய இழப்பீடும்,  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் கொடுப்பதில்லை. அதனால் மக்கள் இதை கடுமையாக எதிர்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  அனைத்து கட்சிகளும் இதில் போராடிக்கொண்டு தான் உள்ளோம். ஆனால், இது மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

திட்டம் கொண்டு வருவது மக்களுக்காகத்தான். ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை மீறி திட்டம் கொண்டு வருவது நிச்சயம் வெற்றி பெறாது. இத்தனை ஆண்டு காலம் என்.எல்.சியை அங்கு நடத்தவிட்டது மக்கள் தான். அப்பொழுதெல்லாம் ஒத்துக்கொண்ட மக்கள் இப்பொழுது ஏன் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் அப்போது வாக்குறுதி கொடுத்த என்எல்சி நிர்வாகம் செய்யவில்லை என்று தெளிவாக தெரிகிறது. மக்கள் எதிர்க்கும் திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. தேவை என்றால் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார். 

click me!