அப்படிக்கா ஒரு புரட்டு.. இப்படிக்கா ஒரு புரட்டு..! கேப்டன் வூட்டம்மாவின் அரசியல் அட்ராசிட்டிகள்..

By Ganesh RamachandranFirst Published Jan 4, 2022, 10:32 AM IST
Highlights

விஜயகாந்தை பார்க்கும்போது அவரால் தீவிர அரசியல் விஷயங்கள், கட்சி ரீதியான முக்கிய முடிவுகளை சிந்தித்து எடுக்க முடியும் என்பது போல் தெரியவில்லை..

ரொம்ப நாளா சொல்லினே இருக்காங்க இதை…’ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார்!’ என்று. அது சமீபத்தில் செம்ம தெளிவாக நிரூபணமானது நம்ம கேப்டன் விஜயகாந்த் விஷயத்தில். பொன்மனசு மிக்க அந்த மனிதர் கடந்த சில வருடங்களாக கடும் உடல் நல குறைபாட்டில் அவஸ்தைப்படுவது தெரிந்த விஷயமே.

நீண்ட நாட்களாக தன் ரசிகர்கள் கம் கட்சியினரின் முன் வராமல் இருந்தவர், கடந்த 1-ம் தேதி புத்தாண்டு தினத்தன்று சென்னை கோயம்பேடில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். புத்தாண்டு வாழ்த்து வாங்கிய கட்சியினருக்கு வாழ்த்தும், தலா நூறு ரூபாயும் தந்து குஷிப்படுத்தினார்.

அந்த நிகழ்வின் போது அவர் அமர்ந்திருந்த நாற்காலியின் பின் நின்று கொண்டே அவரை இயக்கியவர் அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா. உடல் ரீதியில் மிகவும் உடைந்து போன கேப்டனை இந்தளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருப்பதும், இன்னமும் அவருக்கும், அவரது இயக்கத்துக்கும் ஒரு மரியாதையை விட்டுக்கொடுக்காமல் வைத்திருப்பதும் இவர் தான். அதெல்லாமே அன்றையை நிகழ்வின் மூலம் மிக தெளிவாக மக்களுக்கு புரிந்தது.

ஆனால் அதேவேளையில், அக்கட்சியின் ‘செயல் தலைவர்’ எனும் அதிகாரத்தை கையில் எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளார் பிரேமலதா. ‘இதற்கான அறிவிப்பை கேப்டன் விரைவில் வெளியிடுவார்’ என்று கூறியுள்ளார் அவர். ஆனால் விஜயகாந்தை பார்க்கும்போது அவரால் தீவிர அரசியல் விஷயங்கள், கட்சி ரீதியான முக்கிய முடிவுகளை சிந்தித்து எடுக்க முடியும் என்பது போல் தெரியவில்லை. ஆக, பிரேமலதாவேதான் இதை எடுத்து, அறிவிப்பு அறிக்கையை மட்டும் விஜயகாந்தின் கையெழுத்து பொதிந்த ரப்பர் ஸ்டாம்பை பதித்து வெளியிடுவார்! என அவர் கட்சியினரே சொல்கின்றனர்.

இந்நிலையில், தே.மு.தி.க.வின் கடும் தோல்விக்கு, கடந்த சில தேர்தல்களில் அக்கட்சியின் தலைமையான பிரேமலதாவும், அவரது தம்பி சுதீஷும் எடுத்த தவறான கூட்டணி முடிவுகளே காரணம் என்பதே அக்கட்சி நிர்வாகிகளின் சாடல். இப்போதும் கூட பல நிர்வாகிகள் ஆளும் தி.மு.க.வுடன் எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிக் கூட்டணி அமைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் பிரேமலதாவோ ‘தமிழகத்தை இரண்டு பெரிய கட்சிகளும்தான் கடந்த 50 வருடங்களாக மாற்றி மாற்றி ஆண்டுள்ளன. தமிழகத்தில் நடக்கும் அவலங்களுக்கு இவ்விரண்டு கட்சிகளும்தான் பொறுப்பு. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று எட்டு மாதங்களாகிவிட்டது.  ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய அ.தி.மு.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குறைசொல்வார் என தெரியவில்லை.” என்று பேசியுள்ளார்.

அதாவது அ.தி.மு.க.வை திட்டுவது போல் தோசையை இப்படி ஒரு புரட்டு புரட்டி போட்டுவிட்டு, பின் மிக முழுமையாக அக்கட்சிக்கு சப்போர்ட் பண்ணியபடி ஸ்டாலினை விமர்சனம் பண்ணி தோசையை மீண்டும் ஒரு திருப்பு திருப்பி போட்டுள்ளார். இதன் மூலம் ‘மறுபடியும் அண்ணி அ.தி.மு.க. கூட்டணிக்குதான் அச்சாரம் போடுவார் போல தெரியுது. வெளங்குன மாதிரிதான்.’ என்கிறார்கள் தேம்பலான தே.மு.தி.க.வினர்.

என்னான்னு கேளுங்க கேப்டன்!!

click me!