செந்தில் பாலாஜியை மட்டுமல்ல.. அந்த துறையையும் கொஞ்சம் கவனியுங்க... முதல்வருக்கு அட்வைஸ் செய்த தங்கமணி !

By Raghupati RFirst Published Jan 4, 2022, 9:06 AM IST
Highlights

அமைச்சர் செந்தில் பாலாஜி 40 % மட்டுமே துறையை பார்ப்பதாகவும், மீதமுள்ள 60 % பணிகளை தனது சகோதரர் அசோக் பார்ப்பதாகவும் தொழிலதிபர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். முதல்வர் இதனை கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் ஓம் காளி அம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார் முன்னாள் தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ‘ தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை மதுபான கடை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். 

அப்பொழுது அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்கை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.தமிழக அரசு படிப்படியாக மதுபான கடைகளை குறைப்பதாக கூறினர். ஆனால் தற்பொழுது மதுபான கடைகள் அதிகரித்து வருவதுடன் சந்து கடைகளும் அதிகரித்துள்ளன. 

கடந்த திமுக ஆட்சியில் 6400 டெண்டர் மனுக்கள் மட்டுமே வந்ததாகவும், தற்போது 12 ஆயிரம் விருப்ப மனுக்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த முறை அதிமுக ஆட்சியில் திறந்த முறையில் மனுக்கள் பெற்று பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் இந்த முறை என்று எப்படி என்று உங்களுக்கே தெரியும். 

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது உதாரணத்திற்காக பள்ளிபாளையம் நகரத்திலேயே இரண்டு மதுபான கடைகள் அதிகரித்துள்ளன. மேலும் சந்து கடைகளும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து திமுகவினரே என்னிடம் புகார் அளித்துள்ளனர். அது குறித்து சட்டசபையில் பேச வாய்ப்பளித்தால் கண்டிப்பாக தெரிவிப்பேன். தமிழக மின்சாரத்துறை என்பது மிகவும் பொறுப்பான துறை. 

ஆனால் அமைச்சரே தான் 40 % மட்டுமே பார்ப்பதாகவும், மீதமுள்ள 60 % பணிகளை தனது சகோதரர் அசோக் பார்ப்பதாக தொழிலதிபர்களிடம் தெரிவிக்கின்றார். மின்சாரத்துறை என்பது முக்கியமான துறை எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மின்சாரத்துறையை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என முன்னாள் அமைச்சர் தங்கமணி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!