
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்ற பரிதவிப்போடும் பதற்றத்தோடும் மருத்துவமனை வாசலில் காத்துக் கொண்டிருக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
சென்னை, சைதாப்பேட்டை கோயில் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்சோறு நேர்த்திக்கடன் செலுத்திய மறுநாளே சென்னை, வடபழனி முருகன் கோயிலில் அதிமுக நிர்வாகிகள் பலர் அங்கபிரதட்சணம் செய்தனர்.
இது மட்டுமல்லாமல் தமிகத்தின் ஒவ்வொரு மாவட்டங்கள், வட்டங்கள் என அனைத்து கோயில்களிலும், அனைத்து மதத்தினரும் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண உடல்நலத்தோடு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி சென்னையில் இன்று சிறப்பு இசைப்பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இந்த இசைப்பிரார்த்தனை, சென்னை இசைப்பல்கலைக்கழக துணை வேந்தர் வீணை காயத்ரி தலைமையில் நடைபெற்று வருகிறது. இசை பயிலும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இசை பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.