
முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 22ம் தேதி, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ள அவருக்கு, லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும், கோயில்களில் பூஜை, பரிகாரங்கள் செய்து வருகின்றனர். சிலர் மண் சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது, தேர் இழுப்பது உள்பட பல்வேறு வகைகளில் முதல்வருக்காக கோயில்களில் வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, தர்மபுரி எஸ்பி அலுவலகம் அருகே, அருளீஸ்வரர் கோயிலில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கேபி.அன்பழகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
யாக பூஜை நடந்து கொண்டிருந்தபோது, அமைச்சர் அன்பழகன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், அவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றனர். யாக பூஜையில் பங்கேற்ற அமைச்சர் திடீரென மயங்கியது அங்கிருந்த அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைச்சர் அன்பழகன் கூறுகையில், காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால், சற்று களைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். சுமார் 30 நிமிட ஓய்வுக்கு பின், மீண்டும் யாகத்தில் பங்கேற்றார்.