2014ல் செய்ததற்கு 2024 பரிகாரம் தேடும் பிரஷாந்த் கிஷோர்... பாஜகவுக்கு எதிராக பலே திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 4, 2021, 6:27 PM IST
Highlights

2014ல் பாஜக ஆட்சிக்கு வர தான் காரணமாகிவிட்ட நிலையில் அதை ஆட்சியிலிருந்து 2024ல் இறக்குவதற்கும் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறார் பிரஷாந்த் கிஷோர்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் முக்கியமானது மோடி அலை உருவானதாக ஐபேக் டீம் கட்டமைத்த விளம்பரம். பிரசாந்த் கிஷோர் தலைமையில் செயல்பட்ட ஐ பேக் நிறுவனம் ‘குஜராத் மாடல்’என்ற ஒன்றை முன்னிறுத்தியது. அதன் விளைவாக பாஜக வெற்றி பெற்று அரியணை ஏறியது.

ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை தோற்கடிக்க படை திரட்டி வருகிறார் பிரசாந்த் கிஷோர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணையப்போவதாகத் தொடர்ந்து தகவல் வருகிறது. அண்மையில், பிரசாந்த் கிஷோரும் ராகுல் காந்தியும் ஒரு வாரத்தில் மூன்று முறை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்வு அளிப்பது குறித்து பேசியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முடிந்தவுடன் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்க ராகுல் காந்தி விரும்புவதாகவும் தகவல் வெளியானது.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது குறித்து அம்பிகா சோனி, கே.சி வேணுகோபால் மற்றும் ஏ.கே ஆண்டனி ஆகிய மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் இரண்டு நிபந்தனைகள் முன்வைப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதலாவதாக தனக்கு கட்சியில் தேசிய அளவிலான பதவியைக் கேட்கும் பிரசாந்த் கிஷோர், இரண்டாவதாக கூட்டணி அமைப்பது, தேர்தல் பிரச்சார வியூகம் அமைப்பது என அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் முடிவு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சிறப்பு ஆலோசனைக்குழு அமைக்கவேண்டுமென்றும், அதில் தானும் உறுப்பினராக இருக்கவேண்டும் எனவும் கேட்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைமை, பிரசாந்த் கிஷோரின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. 2014ல் பாஜக ஆட்சிக்கு வர தான் காரணமாகிவிட்ட நிலையில் அதை ஆட்சியிலிருந்து 2024ல் இறக்குவதற்கும் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறார் பிரஷாந்த் கிஷோர்.

click me!