
உலகப் புகழ்பெற்ற லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 159 ஆவது ஆண்டுவிழாவையொட்டி இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகைக்கு வருகை தருகிறார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளி உலகப் புகழ்பெற்றது. இந்தப் பள்ளியின் 159-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவையிலிருந்து இன்று பகல் 12 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு பகல் 12.20 மணிக்கு பிரணாப் முகர்ஜி, வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் லவ்டேல் பகுதியிலுள்ள லாரன்ஸ் பள்ளி வளாகத்துக்கு செல்லும் பிரணாப் முக்ர்ஜி பகல் 1.30 மணிக்கு விழாவைத் தொடக்கி வைக்கிறார்.
1 மணி 10 நிமிடங்கள் அங்கிருந்த பின்னர் பகல் 2.40 மணிக்கு லவ்டேலிலிருந்து கார் மூலம் புறப்பட்டு தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து அங்கிருந்து உடனடியாக கோவை திரும்புகிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து லவ்டேல் லாரன்ஸ் பள்ளி வளாகம் வரை 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவரின் வருகைக்காக உதகையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தீட்டுக்கல் முதல் லவ்டேல் வரை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் மேற்பார்வையில் நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பிரார்த்தனை செய்து விட்டு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்த பயணம், வெளிநாட்டு அதிபர் ஒருவரின் டெல்லி வருகையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.