நரி பரியாகாது... ஜெயலலிதாவை புகழ்ந்து எடப்பாடியை வெறுப்பேற்றும் அழகிரி..!

By vinoth kumarFirst Published Oct 17, 2019, 12:40 PM IST
Highlights

தமிழகத்தை ஆளுகிற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் உரிமைகளை போராடி பெறுவற்கு துணிவற்ற நிலையில் இருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தை ஆளுகிற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் உரிமைகளை போராடி பெறுவற்கு துணிவற்ற நிலையில் இருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு தற்போது நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகிற காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இப்படி வெற்றி பெறுவதன் மூலமே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படுவதோடு, மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உரிய வாய்ப்பு கிடைக்கும். 

அ.தி.மு.க.வினரைப் பொறுத்தவரை பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து விட்டு, அவை எவற்றையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை. தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. கடந்த 2015 இல் ரூபாய் 100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தினார். அந்த மாநாட்டில் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு தமிழகத்தில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும் என உறுதி கூறப்பட்டது. 

2019 ஜனவரி 25 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 3 லட்சம் கோடி முதலீட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இந்த முதலீடு காரணமாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா என்றால் மிகுந்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, கடந்த 18 ஜூன் 2019 நிலவரப்படி ரூபாய் 5 ஆயிரத்து 455 கோடி முதலீட்டில் 71 ஆயிரத்து 169 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி அறிவிக்கப்பட்ட முதலீடும் வரவில்லை, வேலை வாய்ப்பும் பெருகவில்லை. 

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு 84 லட்சம் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக காத்திருக்கின்றனர். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவுப் பணிகளுக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 9351 பணியிடங்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கின்றன. 

இதன்மூலம் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் எந்தளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழகத்தை ஆளுகிற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் உரிமைகளை போராடி பெறுவற்கு துணிவற்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2015 முதல் 2018 வரை இயற்கை சீற்றங்களால் வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக அரசு நான்கு தவணைகளில் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. இதில் நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியது வெறும் ரூபாய் 3700 கோடி மட்டுமே. இதன்மூலம் மோடி அரசு தமிழகத்தை எந்தளவிற்கு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது என்பதற்கு வேறு புள்ளி விவரங்கள் தேவையில்லை. 

தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது என்று முதலமைச்சர் எடப்பாடி கூறியிருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி பதவி விலகிய  2014 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டதா ? 2015 இல் மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை திணித்த போது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற்றவர் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், அவரது மறைவிற்குப் பிறகு 2016 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நீட் தேர்வு அ.தி.மு.க. ஆட்சியில் திணிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றி அனுப்பிய இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை அன்று பெற்றிருந்த அ.தி.மு.க., மத்திய பா.ஜ.க. அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கத் துணிவில்லாத காரணத்தால் இன்றைக்கு தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றார்கள் என்ற அவல நிலைக்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் 2018-19 இல் அது ரூபாய் 3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை ரூபாய் 1 லட்சம் கோடியாக எட்டியுள்ளது. மேலும், மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ரூபாய் 2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  

இத்தகைய மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட நிதி நிலைமையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்கோ, வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால், இனி எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரன் அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமாக 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நல்லாட்சி அமைந்திட, உங்கள் வாக்குகளை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!