காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் தான் !! நாடாளுமன்றத்தில் வெளுத்து வாங்கிய பாஜக எம்,பி. !!

By Selvanayagam PFirst Published Nov 28, 2019, 10:30 AM IST
Highlights

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் மக்களவையில் ஆவேசமாக பேசியது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்பிஜி பாதுகாப்பு  விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின் மீது பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “காந்தியைச் சுட்டுக்கொன்றது தொடர்பாக நாதுராம் கோட்சே அளித்த வாக்குமூலத்தில் சில வரிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றார்.

கோட்சே தனது வாக்குமூலத்தில், தான் காந்தி மீது 32 ஆண்டுகளாக வெறுப்பை வளர்த்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை நம்பியதால் அவர் காந்தியைக் கொன்றார்” எனப் பேசினார். அது போல் தான் சோனியா காந்தி குடும்பத்தின் மீது நீண் காலமாக வெறுப்பில் இருப்பவர்ளிடம் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என ராசா  குறிப்பிட்டார்.

ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், “தேசபக்தர் பற்றிய உதாரணம் எதையும் நீங்கள் கூறக்கூடாது” என இந்தியில் எதிர்ப்பு தெரிவித்தார். 

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பிரக்யா தாகூரை அமரும்படி சக பாஜக எம்.பி.க்கள் அறிவுறுத்தினர். ஆ.ராசாவின் பேச்சு மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.

தொடர்ந்து விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸின் குரு கோகாய், ‘நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறிய பாஜக உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியைக் கொன்றவரை தேசபக்தர் என பாஜக எம்.பி குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

click me!