ஜெயலலிதா அமைச்சரவையில் பவர்ஃபுல் அமைச்சர்.. திமுகவில் டம்மியாக்கப்படுகிறாரா ராஜகண்ணப்பன்.?

Published : Mar 30, 2022, 09:32 AM IST
ஜெயலலிதா அமைச்சரவையில் பவர்ஃபுல் அமைச்சர்.. திமுகவில் டம்மியாக்கப்படுகிறாரா ராஜகண்ணப்பன்.?

சுருக்கம்

 போக்குவரத்து துறை முக்கியமான துறையாகும். 1989-இல் மு. கண்ணப்பன், 1996-இல் பொன்முடி, 2006-இல் கே.என். நேரு என திமுகவின் சீனியர்கள்தான் இந்தப் பதவியில் இருந்துள்ளார்கள். அந்த வரிசையில் ராஜகண்ணப்பனுக்கு அந்தப் பதவி கிடைத்தது.  

முக்கியமான போக்குவரத்து துறையிலிருந்து நீக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டதன் மூலம் திமுகவில் அவர் டம்மியாக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுற்றும் சர்ச்சைகள்

ராஜகண்ணப்பன் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சரானது முதலே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வகைகளை தனியாரில் வாங்க நிபந்தனைகளை விதித்து கமிஷன் பெறும் வண்ணம் நடந்துகொண்டதாக போக்குவரத்துத் துறை மீது புகார் எழுந்தது. விசிக தலைவர் திருமாவளவனை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து, சிம்மாசனம் போன்ற சோபாவில் ராஜகண்ணப்பன் அமர்ந்திருந்தது சமூக ஊடகங்களில் பேசு பொருளானது. சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது சர்ச்சை ஆனது. இந்த விவகாரத்தில் நடராஜனை காப்பாற்றும் விதமாக அமைச்சர் ராஜகண்ணப்பன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

இதேபோல அண்மையில் அரசுப் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோட்டல்களில் நிறுத்தும் விவகாரத்தில் சைவ உணவு கடைகளில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையானது. பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டது. அடுத்த உச்சமாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதியைச் சொல்லி ராஜகண்ணப்பன் திட்டிய விவகாரமும் சர்ச்சையானது. அண்மையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பாரத் பந்தில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாமல் போனதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து சர்ச்சையில் போக்குவரத்துத் துறையும் துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன் சிக்கிவந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து  ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். 

திமுகவுடன் கூட்டணி

2008-ஆம் ஆண்டில் அமைச்சர் பதவி கிடைக்காததால் திமுகவிலிருந்து வெளியேறிய ராஜகண்ணப்பன், இன்று திமுக அமைச்சரவையில் நல்ல இலாகா கிடைத்தும் அதை இழந்திருக்கிறார். 1991-ஆம் ஆண்டில் அறிமுக அமைச்சராக ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்த கண்ணப்பனுக்கு (அன்று ராஜகண்ணப்பன் கிடையாது) பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை, மின் துறை என பவர்ஃபுல் இலாக்காக்களை வாரி வழங்கினார் ஜெயலலிதா. அறிமுக அமைச்சர்களுக்கு எளிதில் கிடைக்காத துறைகள் இவை. ஆனால், ராஜகண்ணப்பனுக்கு இதெல்லாம் கிடைத்தது. 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் பதிவாகும் அளவுக்கு திமுகவின் பார்வை இவர் பக்கம் குவிந்திருந்தது.

1996-2000 காலகட்டத்தில் ராஜகண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலகி மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை தொடங்கினார் யாதவ சமுதாயத்தின் பின்னணியில் இந்தக் கட்சியை அவர் நடத்தி வந்தார். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதி அமைத்த கூட்டணி பேசுபொருளானது. சாதிய கட்சிகளை எல்லாம் கூட்டணியில் இழுத்துப்போட்டு சீட்டுகளை வழங்கினார். அந்த வகையில் ராஜகண்ணப்பனையும் திமுக கூட்டணியில் இணைத்து 5 தொகுதிகளை வழங்கினார் கருணாநிதி. அப்போது ராஜகண்ணப்பனுக்கு இளையான்குடி தொகுதி ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன் அதிமுகவுக்கு தாவியது கிளைக் கதை. இந்தத் தேர்தலில் திமுகவும் தோற்றது; ராஜகண்ணப்பனும் தோற்றார்.

அதிமுகவுக்கு ஜம்ப்

தொடர்ந்து தனித்து பயணித்து வந்த ராஜகண்ணப்பன், 2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் தமிழ் தேச கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜகண்ணப்பன் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் பெரிய கருப்பண்ணனை திமுக தலைமை அமைச்சராக்கியது. இதனால், அதிருப்தியில் இருந்த ராஜகண்ணப்பன், 2008-ஆம் ஆண்டில் திமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவுக்கு சென்றார். 2009-ஆம் ஆண்டில் ப.சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வாய்ப்பை ராஜகண்ணப்பன் இழந்தார். ஆனால், அந்தத் தேர்தல் முடிவு சர்ச்சையானது. இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் பயணித்த ராஜகண்ணப்பன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியிலும் இருந்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு திமுகவில் இணைந்தார் ராஜகண்ணப்பன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நிறுத்தப்பட்ட அவர் வெற்றி பெற்று ஸ்டாலின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சரானார். இதன்மூலம் 30 ஆண்டுகள் கழித்து தமிழக அமைச்சரவையில் ராஜகண்ணப்பன் இடம் பிடித்தார். போக்குவரத்து துறை முக்கியமான துறையாகும். 1989-இல் மு. கண்ணப்பன், 1996-இல் பொன்முடி, 2006-இல் கே.என். நேரு என திமுகவின் சீனியர்கள்தான் இந்தப் பதவியில் இருந்துள்ளார்கள். அந்த வரிசையில் ராஜகண்ணப்பனுக்கு அந்தப் பதவி கிடைத்தது.  அடுத்தடுத்து சர்ச்சையான விஷயங்களில் பெயர் வந்ததால், தற்போது ராஜகண்ணப்பன் முக்கிய இலாகாவை பறிகொடுத்துள்ளார். இதன்மூலம் திமுகவில் அவர் டம்மியாக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!