
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன்.
நீண்ட காலம் ஜெ.வால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அவர் சசிகலாவின் எதிரியாகி போன நத்தம் விஸ்வநாதனை ஒழிக்க களமிறக்கபட்டவர்.
இவர் திண்டுக்கல் தொகுதியில் திமுக நகர செயலர் காதரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
கடைசி நேர கவனிப்புகளால் தோல்வியின் விளிம்பில் இருந்த சீனிவாசன் உள்ளூரில் அதிக செல்வாக்குள்ள திமுக வேட்பாளரை வீழ்த்தினார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று தன் தொகுதியான திண்டுக்கல்லுக்கு சென்ற சீனிவாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் தொகுதி மக்கள்.
வேட்டியை பிடித்து இழுத்தும், அவர் மீது முட்டி மோதியும் களேபரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவருக்கு ஓட்டளித்தமைக்கு வருந்துகிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தொகுதி முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ளது.
நாங்கள் ஓட்டு போட்டது உங்களுக்கு அல்ல... மக்களுக்கு நல்லது செய்வார் என்று அம்மா அவர்களுக்கு... ஆனால் நீங்கள் தேர்ந்தேடுத்ததோ மாபியா கும்பலை என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களும் பொதுமக்கள மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பை கண்டு அதிமுக தலைமை ஆடி போயுள்ளதாம்.