பகுத்தறிவு எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகள்... முருகனுக்காக முழங்கும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Jul 17, 2020, 1:31 PM IST
Highlights

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதனடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகை திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கி போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.

தமிழர்களின் பெருத்தப் பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில், தமிழின முன்னோர்களை இழித்துரைத்துப் பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவும் கொண்டதாகும். ஆரியப்படையெடுப்பால் இடையில் நிகழ்ந்த கலப்பினால் அவை யாவும் சிறுக சிறுக சிதைக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் திருடப்பட்டு, புனைந்து நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தனக்கென தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத ஆரியம் எல்லாவற்றையும் திருடிச்சேர்த்து, புழுகிப் புராணமாகவும், இதிகாசமாகவும் மாற்றி நிலைநிறுத்தி பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துப் பொதுப்புத்தியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து சமரிட்ட புத்தர், சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார், ஐயா வழியென தனி வழிப்பாட்டு முறையை ஏற்படுத்திய வைகுந்தர், இசுலாமியர்களோடு இணக்கம் காட்டிய மராத்திய சிவாஜி என தன்வயப்படுத்தி உட்செரிக்கும் ஆரியம், அறிவாசான் அண்ணல் அம்பேத்கரையும், பெரும்பாட்டன் வள்ளுவனையும்கூட திருட எத்தனித்து வருவதை நாடறிந்ததே!

திருடிச்சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் தமிழின முன்னோர்கள் முருகன், சிவன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவரும் இன்றைக்கு முழுமையாக ஆரியமயக்கப்பட்டுவிட்டனர். நாட்டார் தெய்வங்கள் மீது படையெடுப்பை நிகழ்த்தாத ஆரியம், திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டது. விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். 

திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையை பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்ரனாக்கினார்கள். இத்தகைய முறையில் நிகழ்ந்த ஆரியமயமாக்கல் மூலம் ஆபாசக்கதைகளை எழுதி, இட்டுக்கட்டி நமது முன்னோர்களை மொத்தமாய் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். இதனை மிகச் சரியாக உணர்ந்து, ஆரியச் சதிகளை முறியடித்து தமிழர்களுக்கென்று இருந்த பாரம்பரிய வழிபாட்டை மீட்டெடுத்து வழிகாட்டாது ‘கடவுள் மறுப்பு’ என திராவிட இயக்கங்கள் மொத்தமாய் கைவிரித்ததன் விளைவாகத்தான் தமிழ்த்தேசிய இனத்தின் மக்களை ‘இந்து’ எனும் கற்பிதத்திற்குள் மொத்தமாகத் தள்ளி ஆட்கொண்டு ஆண்டுக்கொண்டிருக்கிறது ஆரியம். 

இது திராவிட இயக்கங்கள், ஆரியத்திற்கு முறைவாசல் செய்து வரவேற்று, வழிதிறந்து விட்ட பெரும் வரலாற்றுத்தவறாகும். அதனை முழுதாய் தெளிந்துணர்ந்தே, அவ்வரசியலைத் தோலுரித்து பண்பாட்டுத்தளத்தில் பெரும் புரட்சியை உருவாக்க நாம் தமிழர் கட்சி தனது சக அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி எனும் படைப்பிரிவை உருவாக்கி, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய மயமாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை மீட்டு தமிழ் மயப்படுத்தும் பணிகளைச் சட்டத்தின் வாயிலாகவும், போராட்டங்களின் வாயிலாகவும், பரப்புரைகளின் வாயிலாகவும் நாளும் செய்துகொண்டிருக்கிறது. மகத்தான இந்த வரலாற்றுப் பணியை நாங்கள் செய்யத் தொடங்குகிறபோது கேலிசெய்து பிற்போக்கெனக் கட்டமைக்க முயன்ற திராவிடக்கூட்டம், இன்றைக்குத் தமிழ்க்கடவுள் முருகனை ஆரியத்திடமிருந்து மீட்க வேண்டுமெனக் கோரி, திடீர் கூக்குரலிட்டுக் கிளம்புவது நகைப்பையே தருகிறது.

தமிழ்நாட்டைத் தாண்டி முருகப் பெரும்பாட்டனின் வழிபாட்டுத்தளத்தை எங்கும் நிறுவ முயலாத இந்துத்துவ இயக்கங்கள் ‘இந்துக்கடவுள்’ என அவரைச் சொந்தம் கொண்டாட முயல்வதும், இத்தனை ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில் தைப்பூசத்தை அரசு விடுமுறையென அறிவித்திடாத திராவிடக்கட்சிகளும், அக்கோரிக்கையை வைத்திடாத திராவிட இயக்கங்களும் இன்றைக்குத் திடீரென முருகனைப் பேசுவதும், புகழ்வதும் அரசியல் தன் இலாபம் என்பதைத்தாண்டி வேறில்லை.

முப்பாட்டன் முருகனைப் பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவுப் பரப்புரை எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகளை அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சனம் என்ற பெயரில் வக்கிரத்தை உமிழ்ந்து, பெருவாரியான மக்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் மதவுணர்ச்சியை மேலிடச்செய்து மதவாத இயக்கங்கள் வேரூன்றவே திராவிட ஆதரவாளர்களின் இத்தகையச் செயல்கள் உதவுகிறதே ஒழிய, தமிழுக்கும், தமிழர்க்கும் அணுவளவும் நலன் பயக்கவில்லை. முருகனை விமர்சிக்கும் அந்நபருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கோரி வாக்கு அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து திமுக வாய்திறக்க மறுத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம்; ஆரியத்திடம் சரணாகதி அடையும் திராவிடத்தின் வழமையான பிழைப்புவாதமென்றால், மிகையில்லை.

இத்தகைய இழிவானப் பரப்புரை மூலம் தமிழர் மெய்யியல் மீட்சிக்கான எங்களது சமரை ஆரிய – திராவிட அடிவருடிகள் தங்களது மோதலாய் காட்டி அரசியல் இலக்காக மடைமாற்றி தமிழ்ச்சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முயல்வது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற இழிசெயல்களால் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முத்தமிழ் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருபோதும் குன்றிவிடாது எனவும், தமிழர்களின் ஆதி சமயங்களையும், வழிபாட்டு முறைமைகளையும், தொல்லிய இறைகளையும் மீட்டெடுத்து மெய்யியல் மீட்சியை வீரத்தமிழர் முன்னணி சாத்தியப்படுத்திக் காட்டும் எனவும் இதன் மூலம் பேரறிவிப்பு செய்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!