
தமிழகத்தில் நவோதய பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் நவோதயா பள்ளிகளுக்கு அனுதி அளிக்கப்படவில்லை. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மாவட்டம்தோறும் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் இது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அரசு தொடங்காவிட்டால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் என தெரிவித்தார்.
மேலும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.