தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுத்த நிறுவனத்திற்கும், அதிகாரிகளுக்கும் ஆப்பு.. சாட்டை சுழற்றிய முதல்வர்.!

By vinoth kumarFirst Published Jan 22, 2022, 7:23 AM IST
Highlights

பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த பரிசுதொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் எழுந்தவண்ணம் இருந்து வருகின்றன. விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை, புளியில் பல்லி, பரிசு பணம் எங்கே என்று பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த பரிசுதொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் எழுந்தவண்ணம் இருந்து வருகின்றன. விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை, புளியில் பல்லி, பரிசு பணம் எங்கே என்று பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தொடர் புகார் மற்றும் குற்றசாட்டுகள் காரணமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசுத்தொகுப்பு விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்துக்கு பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினர் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த ஆட்சிக்காலத்தில் 6 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21 பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன. மேலும்,தற்போது வழங்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவை கூடுதல் எடையில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடந்திருந்த நிலையில், ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் குறைபாடுகள் இருந்ததாக அரசுக்கு புகார்கள் வந்தன. அவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். மேலும், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

விரிவான ஆய்வுக்கு பிறகு முதல்வர் அறிவுறுத்தியதாவது: பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் வரக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுஅலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். முதல்வரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தவறு செய்தவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!