தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை... அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!!

By Narendran SFirst Published Jan 21, 2022, 10:13 PM IST
Highlights

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரின் முதல் மனைவி கனிமொழி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தத் தம்பதியருக்கு 17 வயதில் ஒரு மகள். முதல் மனைவி இறந்த பின்பு, முருகானந்தம் சரண்யா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, முருகானந்தம் தன் மகளை தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அவர், பள்ளி வளாகத்திலுள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கிப் படித்துவந்தார். தற்போது அவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி விடுதியிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதே காரணம் எனக்கூறப்பட்டது. மேலும் இதுக்குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சாவூர் எஸ்பி ராவலி, தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி வார்டன் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனிடையே மாணவி அளித்த மரண வாக்குமூலம் வெளியானது. அதில், மாணவி, தன்னுடைய நிலைமைக்கு வார்டன்தான் காரணம்.

அவர் என்னை தொடர்ந்து கணக்கு வழக்கு பார்க்க சொன்னதால் தான் தற்கொலை முடிவுக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்றும் எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையிலேயே தற்போதைய அரசு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தஞ்சை மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்பது ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகிறது என்றும் உரிய விசாரணை செய்து அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

click me!