டெல்லி துணை முதல்வர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை.. தமிழை தலையில் வைத்து கொண்டாடும் தலைநகரம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2021, 11:25 AM IST
Highlights

தமிழ் மொழியை பரப்ப தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.  

உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்களால் நேற்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் கலாச்சாரத்தை போற்றும் வகையில், டெல்லி  துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இல்லத்தில் நேற்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. உலகின் மூத்த மொழியான தமிழ் மொழிக்கான  உரிய அந்தஷ்த்து பல்வேறு நாடுகள் மற்றும் மொழி இன மக்கள் மற்றும் அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. மூத்த மொழி தமிழ்  என்பதை அங்கீகரிக்கும் நடவடிக்கைகள் பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகின்றன. கனடா, பிரிட்டன், சுவிஸர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தமிழ் மொழியை   ஏகமனதாக அங்கிகரித்துள்ளன. 

இந்நிலையில் தமிழ் மொழியை அங்கீகரிக்கும் வகையிலும் அதன் தொன்மையை போற்றும் வகையிலும் டெல்லி அரசு தமிழ் அகடமி அமைத்துள்ளது. அதன் தலைவராக டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அகாடமியின் சார்பில் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவோர்க்கு ஆண்டுதோறும் விருதுகளும், சன்மானமும் வழங்கப்பட உள்ளது. தமிழ் மொழியை பரப்ப தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. இன்னும் தமிழ் அகாடமிக்கு தனி இடம் வழங்கப்படாததால், தமிழர் திருநாளான தைப்பொங்கல் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இல்லத்தில் கொண்டாடப்பட்டது. 

அதில் தமிழர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மணிஷ் சிசோடியா இல்லத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டு பொங்கலோ பொங்கல் என முழங்கப்பட்டது. துணை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, டெல்லி எப்போதுமே பன்முகத்தன்மை கொண்ட நகரமாகும். மக்களை ஒன்றிணைத்து வாழவைக்கும் ஒற்றுமையின் வெளிப்பாடாக இந்தப் பண்டிகை அமைந்துள்ளது. தைப்பொங்கலை தமிழ் மக்களோடு நானும் கொண்டாடினேன். தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!