கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. உளவுத்துறை உதவாது.. அதிமுக வெல்லும்.. அமித் ஷாவிடம் மெர்சல் காட்டிய எடப்பாடி

By Selva KathirFirst Published Jan 19, 2021, 10:07 AM IST
Highlights

கடந்த 2016 தேர்தலில் மொத்தம் 6 முக்கிய கருத்துக்கணிப்புகள் திமுக மறுபடியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று முடிவுகளை வெளியிட்டன, ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் எடுத்துக்கூறியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த 2016 தேர்தலில் மொத்தம் 6 முக்கிய கருத்துக்கணிப்புகள் திமுக மறுபடியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று முடிவுகளை வெளியிட்டன, ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் எடுத்துக்கூறியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கூட்டணி விஷயத்தில் பாஜக பாராமுகமாக இருப்பதை சரி செய்யவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணியை விரைவாக முடிவு செய்து களம் கண்டால் மட்டுமே வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்கிற நிதர்சனமான உண்மையை எடப்பாடி பழனிசாமி புரிந்து வைத்துள்ளார். அதனால் தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே கூட்டணி கட்சிகளை சரிகட்டும் வேலையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். ஆனால் இந்த விஷயத்தில் பாஜக, பாமக, தேமுதிக என எந்த கட்சிகளும் பிடிகொடுக்க மறுக்கின்றன. இந்த மூன்று கட்சிகளில் முதலில் பாஜகவை சரி செய்தால் போதும் மற்ற கட்சிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.

இதற்காகவே அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தனது டெல்லி பயணத்தின் மிக முக்கிய திட்டமாக நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு தரப்பிலும் பொதுவான ஒரே ஒரு மொழி பெயர்ப்பாளரை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சொல்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றவர் ஒரே ஒரு உயர் அதிகாரி மட்டுமே என்றும் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு மொழி பெயர்ப்புக்கு உதவி மட்டுமே செய்ததாக சொல்கிறார்கள்.

அமைச்சர்களோ, அதிமுக நிர்வாகிகளையோ அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அழைத்துச் செல்லவில்லை. இதே போல் அமித் ஷாவும் தமிழக பாஜக தொடர்புள்ள யாரும் இல்லாமல் தன்னுடைய உதவியாளரை மட்டுமே வைத்துக் கொண்டு பேசியதாக கூறுகிறார்கள். ஒன்றரை மணி நேர சந்திப்பு முழுக்க முழுக்க தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக மட்டுமே நடைபெற்றதாக சொல்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பதை வரை ஏற்கனவே தமிழக பாஜகவிடம் இருந்து பெற்ற இன்புட்டுகளை அப்படியே எடப்பாடியிடம் அமித் ஷா கொடுத்ததாக கூறுகிறார்கள்.

கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளதால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒரு குழு அமைத்து பேசிக் கொள்ளலாம் என அமித் ஷாவிடம் எடப்பாடி கூறியதாகவும் அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். இது தவிர மிக முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயம், அமலாக்கத்துறை, சிபிஐயின் தமிழக ஆப்பரேசன்கள் பற்றித்தான் என்கிறார்கள். தமிழகத்தில் அண்மையில் ஈரோட்டில் ஸ்ரீபதி அசோஷியேட்ஸ் எனும் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனம் தமிழக அரசுக்காக பல்வேறு கட்டிட பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு கஜானாவாகவும் இந்நிறுவனம் உள்ளது.

இதே போல் வேறு சில நிறுவனங்களையும் தமிழகத்தில் சிபிஐ குறி வைத்துள்ளதாக தமிழக உளவுத்துறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காதில் ஏற்கனவே போட்டு வைத்துள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது கவலையை அமித் ஷாவிடம் தெரிவித்ததாகவும், கூட்டணி விவகாரத்தில் திமுகவை விட அதிமுக நம்பிக்கைக்கு உரிய கட்சி என்றும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – அதிமுக எவ்வித நெருடலும் இல்லாமல் இணைந்து செயல்பட்டால் திமுகவை வீழ்த்தலாம் என்று எடப்பாடி அமித் ஷாவிடம் விளக்கியுள்ளார். அதற்கு கருத்துக்கணிப்புகள், உளவுத்துறையின் மதிப்பீடு உங்கள் அரசுக்கு எதிராக உள்ளதே என்று அமித் ஷா கொக்கிப்போட்டுள்ளார்.

இதனை எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமி 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 9 பெரிய கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டன. இவற்றில் 6 கருத்துக் கணிப்புகள் மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வராது, திமுக ஆட்சிக்கு வரும் என்றே முடிவுகளை வெளியிட்டன. ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக மறுபடியும் ஆட்சி அமைத்தது. இதே போல் உளவுத்துறையும் கூட மறுபடியும் திமுக ஆட்சி என்றே ரிப்போர்ட் கொடுத்தது. தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் தேர்தல் முடிந்த உடன் மு.க.ஸ்டாலினை சென்று பார்த்தார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருந்தது என்பதை அமித் ஷாவிடம் எடப்பாடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தவிர தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாதிக்கு பாதி வெற்றி, இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது இவை அனைத்திற்கும் காரணம் அதிமுகவினரின் தேர்தல் பணிகள் என்பதையும் எடப்பாடியார் எடுத்துக்கூறியுள்ளார். எனவே அதிமுகவை தடையின்றி தேர்தல் பணியாற்ற ஏற்பாடு செய்தால் அதிமுக மட்டும் அல்ல பாஜகவும் கணிசமான தொகுதிகளில் வென்று திமுகவை வீழ்த்த முடியும் என்று ஆணித்தனமாக எடுத்துரைத்துள்ளார். இவற்றை எல்லாம் நோட்ஸ் எடுத்துக் கொண்ட அமித் ஷா மகிழ்ச்சியாக எடப்பாடியை அனுப்பி வைத்ததாக சொல்கிறார்கள்.

click me!