பொள்ளாச்சி வீடியோ விவகாரத்தில் அதிரடி... மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு..!

By Thiraviaraj RMFirst Published Mar 14, 2019, 7:04 PM IST
Highlights

பொள்ளாச்சி வீடியோ விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்புவதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி வீடியோ விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்புவதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடூரமாக மிரட்டி வீடியோ பதிவு செய்த விவகாரம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினரே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் மீது அவதூறு பரப்புவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ’’கடந்த 11ம் தேதி முதல் பல்வேறு சமூக ஊடகங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியானது போல் தயாரித்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வில் கைது செய்யப்பட்டுள்ள முதல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கும், எனக்கும் என் மகனுக்கும் தொடர்பு உள்ளது போல என்னுடைய அரசியல் பயணத்தை சீர்குலைக்க வேண்டும் என்றும், இத்தனை காலம் நான் காப்பாற்றிவரும் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்களின் தூண்டுதலின் படி ஒரு உண்மைக்கு மாறான செய்தி திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நடந்ததாக நான் கேள்விப்பட்ட உடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திரன் உடன் என் மகனும், கோவை காவல்துறை தலைவரிடமும், கோவை புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் தர கூறினேன். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதன் முதலில் சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தது நான் தான். ஆனால், இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி சபரீசன் தூண்டுதலின் பேரில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். 

இதனால், நான் மட்டுமல்ல என் குடும்ப உறுப்பினர்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளனர். எனவே  புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த செய்தியை பரப்பியவர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் மு.க.ஸ்டாலின்  மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடுபிடித்துள்ளது. 

click me!