அடியும் வாங்கி.. வழக்கும் வாங்கிய பொள்ளாச்சி ஜெயராமன்.. இது போதாதகாலம்றது.. புலம்பும் அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2021, 5:07 PM IST
Highlights

ஆனால் அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோதவாடி கிராமத்தில் பொங்கல் விழாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது திமுகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவர் உட்பட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வரும் நிலையில், தாக்குதலுக்குள்ளான பொள்ளாச்சி ஜெயராமன் மீதே போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின் கீழ் இறங்கி வருகிறது. அதிமுகவுக்கு ஈர்ப்பு மிக்க தலைவர் இல்லாததால் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்சியை இழந்தாலும் கௌரவமிக்க எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. மக்கள் திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் மக்கள் வெகுவாக வரவேற்று பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை  சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த ஆட்சியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நெருக்கடியான சூழலில் அதிமுக தள்ளப்பட்டுள்ள நிலையில் நேற்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குளம் நிரம்பியுள்ளது. அந்த குளத்தை சீரமைத்து நாங்கள்தான், அந்த குளம் நிரம்பியதற்கு காரணம் நாங்கள்தான் என அதிமுக ,திமுகவினர் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவினரின் அழைப்பின்பேரில் கோதவாடி குளத்தை பார்வையிட எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று வருகை தந்தார். அப்போது அங்கிருந்த திமுகவினர் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கிருந்து வெளியேறுமாறு விரட்டினர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் பொள்ளாச்சி ஜெயராமனை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர்.

இது குறித்து பின்னர் போலீசார் கூறுகையில், கோதவாடி குளம் நிரம்பியதை கொண்டாடும் வகையில் பொங்கள் வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ள பொள்ளாச்சி ஜெயராமனை அதிமுகவினர் அழைத்து வந்தனர். அது திமுகவினரை எரிச்சலடைய வைத்ததால் அங்கும்  சிறிய அளவில் தள்ளு முள்ளு நடந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதணையடுத்து அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில். 50ஆண்டுகளுக்கு பிறகு கோதவாடி குளம் நிரம்பியதை அடுத்து குளக்கரையில் பொங்கல் வைத்து பெண்கள் சாமி கும்பிட உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறு பொள்ளாச்சி ஜெயராமனை கிராம மக்கள் அழைத்துள்ளனர். அழைப்பினை ஏற்று நேற்று பொள்ளாச்சி ஜெயராமன் அங்கு செல்லுகையில் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் பொள்ளாச்சி ஜெயராமனை முன்னூத்தி பொங்கல் வைக்க கூடாது என்று அந்த கிராம மக்களை மிரட்டியதுடன், பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் அங்கிருந்து மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த வன்முறையை கடுமையாக கண்டிக்கிறேன், இந்த சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும் என்று எச்சரிக்கிறேன், பொள்ளாச்சி ஜெயராமன் மீது பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த சம்பவத்தை கண்டித்தார். பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோதவாடி கிராமத்தில் பொங்கல் விழாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் மாறாக அவர் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
 

click me!