பொள்ளாச்சி வழக்கு... சிபிஐ.. உள்துறை... அதிமுகவின் தேர்தல் கணக்குகளை கொலாப்ஸ் ஆக்கும் பாஜக..!

By Selva KathirFirst Published Jan 7, 2021, 11:51 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக மாணவரணி நகரச் செயலாளர் கைது, 100 சதவீதம் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதி முடிவுக்கு முட்டுக்கட்டை என மத்திய பாஜக அரசு கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக மாணவரணி நகரச் செயலாளர் கைது, 100 சதவீதம் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதி முடிவுக்கு முட்டுக்கட்டை என மத்திய பாஜக அரசு கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கில் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கைது நடவடிக்கையை எடுத்துள்ள சிபிஐயின் நடவடிக்கை அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதிமுகவிற்கு மட்டும் அதிர்ச்சி வைத்தியமாக இது அமைந்துள்ளது. சம்பவம் நடைபெற்று 2 வருடங்கள் முடிந்த நிலையில் திடீரென அதிமுக மாணவர் அணிச் செயலாளர் மணவாளன் உள்ளிட்ட 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.

பொள்ளாச்சி வழக்கு குறித்து தற்போது யாரும் வாய் திறக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று எந்த கட்சியும் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் சிபிஐ திடீரென தாமாக முன்வந்து இந்த வழக்கில் கைது நடவடிக்கை எடுத்திருப்பது அதிமுகவிற்கு எதிரான பாஜக அரசின் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணியில் இருந்தாலும் தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக காட்டும் கெடுபிடி தான் பாஜகவை டென்சன் ஆக்கி சிபிஐயை களம் இறக்கியுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் தங்களுக்கு இணக்காக நடந்து கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும் என்று அதிமுக தலைமைக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

இதே போல் நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் ஆதரவை கருத்தில் கொண்டு மாஸ்டர் படம் வெளியாகும் போது வசூல் பாதிக்கப்படக்கூடாது என கருதி திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் இது கொரோனா வழிகாட்டுல் நெறிமுறைகளை மீறிய செயல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த முடிவில் இருந்து தமிழக அரசு பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ மூலம் அதிமுகவின் இமேஜை டேமேஜாக்கும் அதே வேளையில் விஜய் ரசிகர்கள் ஆதரவை அதிமுக பெறாத வகையில் உள்துறை அமைச்சகம் மூலம் பாஜக இப்படி ஒரு செக்கை வைத்துள்ளதாக சொல்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 41 தொகுதிகள் என்பதில் அந்த கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது. ஆனால் அவ்வளவு தொகுதிகள் கிடையாது என்பதில் அதிமுக பிடிவாதமாக உள்ளது. இந்த பிடிவாதத்தை தளர்த்த இப்படி அதிமுகவின் தேர்தல் கணக்குகளை கொலாப்சாக்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

click me!