சாதியை ஒழித்துவிட்டதாக மார்தட்டி கொள்ளும் அரசியல் கட்சிகள்.. மாணவர் உயிரிழப்புக்கு வெட்கப்படனும்.. பாஜக..!

By vinoth kumarFirst Published May 1, 2022, 12:25 PM IST
Highlights

சாதிய சிந்தனையற்ற, அனைத்து மாணவர்களையும் கண்டிப்போடு, அரவணைத்து செல்ல கூடிய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை அந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் உடன் நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே சாதிய வெறியை தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு.

மாணவர்களிடையே சாதிய வெறியை தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

மாணவர் உயிரிழப்பு

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கக் குறைபாடு உள்ளதாக கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு பள்ளியில், சாதி அடையாள கயிறு கட்டியது தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் நடந்த தாக்குதலில் ஒரு மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 அலட்சியமே காரணம்

இது ஏதோ தற்செயலாக நடந்துள்ள சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை. பல நாட்களாக இந்த விவகாரம் புகைந்து கொண்டிருந்திருக்க கூடிய சூழ்நிலையில்,  ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர்  தொடர்ந்து கண்காணித்து. நடவடிக்கை எடுத்திருந்தால் மோதலையும், உயிரிழப்பையும் தடுத்திருக்கலாம். ஆனால், ஆசிரியர்களின், நிர்வாகத்தின், கல்வி துறையின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம்.  தொடர்புடைய பள்ளி நிர்வாகிகள் மற்றும் துறை அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தாமதிக்கக்கூடாது. 

நடவடிக்கை தேவை

மேலும், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது இருக்க ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை. சாதிய சிந்தனையற்ற, அனைத்து மாணவர்களையும் கண்டிப்போடு, அரவணைத்து செல்ல கூடிய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை அந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் உடன் நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே சாதிய வெறியை தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. இல்லையேல் அடுத்த தலைமுறையின் வளர்ச்சி கேள்விக்குறியே! சாதியை ஒழித்துவிட்டதாக மார் தட்டி கொள்ளும் அரசியல் கட்சிகள் வெட்கப்பட வேண்டிய கேடுகெட்ட நிலை என 
நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

click me!