நெகிழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை.. கட்சி வேறுபாடுகளை கடந்து குவிந்த வாழ்த்து!!

By Asianet TamilFirst Published Sep 2, 2019, 11:43 AM IST
Highlights

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக முன்னாள் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தமிழக பாஜகவின் தலைவராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் இருந்து வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். 2014 ம் ஆண்டு பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து தலைவர் பதவி தமிழிசைக்கு கொடுக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக நின்ற கனிமொழியை எதிர் போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்திருந்தார். 5 ஆண்டுகளுக்கு மேல் மாநில தலைவர் பதவியில் தமிழிசை இருப்பதால் மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் அறிவித்தார். இதையடுத்து அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழகத்தை சேர்ந்த தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி வெளிநாட்டில் இருந்தபடி தொலைபேசியில் வாழ்த்தினார். துணை முதல்வர் பன்னீர் செல்வமும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார். திராவிடர் கழக தலைவர் வீரமணி, ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அன்பு மகள் என்று தம்மால் அழைக்கப்படும் தமிழிசையை வாழ்த்துதுவதாக தெரிவித்திருந்தார். இன்னும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழிசையை வாழ்த்தி இருந்தார்கள்.

சிந்தாந்த ரீதியாக வேறு வேறு கருத்துக்கள் கொண்டவர்களும் உளமார வாழ்த்தியது தமிழிசையை நெகிழ்ச்சியடைய வைத்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

click me!