
மக்களின் உயிரும் உடைமைகளும்தான் முக்கியமே தவிர, மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றதாக இல்லை என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப் பகுதி மக்கள் அமைதியான முறையில் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட முடிவு எடுத்தனர். இதற்காக வணிகர்கள் இன்று முழுவதும் கடையடைப்பு நடத்தி பேரணியாக சென்று முற்றுகையிட திட்டமிட்டனர். இந்த பேரணிக்கு போலீஸ் தடை உத்தரவு போட்ட்து. 144 தடை உத்தரவை மீறி இன்று காலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பல்வேறு வகையில் காவல்துறை தடுத்து பார்த்த்து. போராட்டக்கார்ர்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்தி போட்டு சூறையாடினர்.
ஆயிரக்கணக்காண மக்கள் ஒன்றுகூடியதால் காவல்துறை ஓடி ஆட்சியர் அலுவலகத்தை பாதுகாக்க முனைந்தது. மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட்தும் அங்குள்ள் வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஆட்சியர் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனை அடுத்து போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உணர்வுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், தமிழக அரசும், மத்திய அரசும் பொதுமக்களின் போராட்டத்தை உதாசீனப்படுத்தியதன் விளைவு இன்று 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றபோது, ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. அமைதியான போராட்டம் கலவரமாக மாறியதுடன் இதனால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. பொதுமக்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களின் உயிரும் உடைமைகளும்தான் முக்கியமே தவிர, மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றதாக இல்லை. எனவே மக்கள் விரும்பாத அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக ஆளும் அ.தி.மு.க அரசும் மத்திய அரசும் தடைவிதித்து நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கிச்சூடு கலவரத்தில் ஈடுபட்டுக் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதைத் தவிர்க்காமல் தமிழக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், காலம் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அ.தி.மு.க அரசும் மத்திய அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய அ.தி.மு.க அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு என்று விஜயகாந்த் அதில் தெரிவித்துள்ளார்.