துப்பாக்கி சூட்டை கண்டித்து உருவ பொம்மை எரித்த கௌதமன் கைது...! பரபரப்பு...

First Published May 22, 2018, 3:43 PM IST
Highlights
Director Gowthaman Arrest


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைநிர்வாக இயக்குநரின் உருவ பொம்மையை எரித்த இயக்குநர் கௌதமனை போலீசார் இன்று கைது செய்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் தடுப்பையும் மீறி போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள், காவல் வாகனத்தைக் கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்தனர். போரட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 

போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் துப்பாக்கிச்சூடு
நடத்தியது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் கௌதமன், துப்பாக்கி சூடு
நடத்தப்பட்டது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். சொந்த
மக்களையே சுட்டுக் கொல்வதற்கு பெயர் அரசா? என்று கௌதமன் கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்றார். போராட்டத்தில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக இயக்குநரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் கௌதமன் ஈடுபட்டார். உருவபொம்மை
எரிப்பின்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து போராட்டத்ததில் ஈடுபட்டு வந்த இயக்குநர் கௌதமனை போலீசார் கைது செய்தனர்.

click me!