நள்ளிரவில்  போராட்டமா ? சென்னை மெரீனா கடற்கரையில் மீண்டும் போலீஸ் குவிப்பு !!!

First Published Sep 2, 2017, 10:52 PM IST
Highlights
police in merina


அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்களும், இளைஞர்களும் இன்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வந்தததையடுத்து, சென்னை மெரீனா கடற்கரையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் , குழுமூரை சேர்ந்த  அனிதா பிளஸ் 2,  பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை சண்முகம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக கஷ்டப்பட்டு  படித்து வந்த அனிதா,  நீட் என்ற அரக்கன் அவரது வாழ்வில் விளையாடிவிட்டான்.

கிராமப்புற மாணவியான அனிதா நீட் நுழைவு தேர்வு எழுதியதில் 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். 

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில்தான்  மருத்துவ கலந்தாய்வு நடத்து வேண்டும் என  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு  மாணவர்கள் மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் பரவியது. ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடியதைப் போல இந்த பிரச்சனைக்காக போராட்டம் தொடங்கி விடுமோ என அச்சம் அடைந்த தமிழக அரசு, மெரீனா கடற்கரையில் யாரும் கூடிவிடாதவாறு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரைக்கு யாரும் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

click me!