
திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதலமைச்சர் நான் அடித்துவிடுவேன் என்று பயந்து போயிருப்பதாக தெரிவித்தார்..
அதுமட்டுமின்றி, `சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் நேருக்கு நேர் சவால் விடுத்தார். மேலும் சாதி ரீதியாகவும், கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார்
இதையடுத்து அவர் மீது 8 விரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், கருணாஸை போலீசார் அவரது சாலி கிராமம் வீட்டில் இருந்து கைது செய்தனர். முதலில் புழல் சிறையிலும் பின்னர் அவர் வேலூர் விறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
கருணாஸ் தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க, காவல் துறை சார்பில் கருணாஸை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மனுக்களும் இன்று எழுப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.