சமூக வலைதளத்தில் அசிங்கம், ஆபாசமாக கருத்து பதிவிட்டவர்களுக்கு ஆப்பு.. 60 நாட்களில் 25 வழக்கு 16 பேர் கைது.

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2021, 11:31 AM IST
Highlights

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்காக அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த அறுபது நாட்களில் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வழக்கில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அதிலும் குறிப்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நவீன அரசியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பலரும் சமுதாய அரசியல் உள்ளிட்டவைகள் சார்ந்த ஆக்கபூர்வமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

ஆனால் ஒரு சிலர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டும் வகையிலும், ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்காக அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். காவல் துறையை பொருத்தவரை சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் அதேபோன்று சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், குறிப்பாக சாதி, மதம் சார்ந்த இருதரப்பு இடையே மோதல்கள் விளைவிக்கும் வகையில் ஈடுபடுதல்,

மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் வகையில் அமைந்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 60 நாட்களில் மட்டும், சமூக வலைதளங்களில் சட்டவிரோத கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!