PMK : முதலில் ஸ்டாலின்.. அடுத்து எடப்பாடி பழனிசாமி - ரவுண்ட் கட்டும் அன்புமணி ராமதாஸ் !

By Raghupati RFirst Published May 29, 2022, 12:49 PM IST
Highlights

Anbumani Ramadoss : சென்னை திருவேற்காட்டில் நேற்று  பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

25 ஆண்டுகளாக  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே மணி இருந்து வந்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், ஆட்சிப் பொறுப்புக்கு  அழைத்து செல்லும் வகையிலும்  பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு பொதுக் குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுபேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி,அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் நேற்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின்,  'பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை  சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 'பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறேன். 

அதன் அடிப்படையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றேன். எங்களுக்குள் அரசியல் எதுவும் பேசவில்லை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தோம். 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு என்னென்ன தேவைப் படுகிறது அதற்காகத்தான் இப்போதிலிருந்தே பாடுபடுகிறோம் 2024 தேர்தலுக்கும் அதே தான் செய்கிறோம்.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் இளைஞர்களை சார்ந்த பிரச்சனை அதிலும் குறிப்பாக அடுத்த தலைமுறையை சார்ந்த பிரச்சனைகள் அதில் முதன்மையானது மது சார்ந்த, போதை சார்ந்த பிரச்சனைகள் எனவே தமிழ்நாட்டில் பல பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் வெளியே அதிக அளவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது,இது இன்று,நேற்று  கிடையாது. பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.அதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்' என்று கூறினார்.

இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !

இதையும் படிங்க : ”சொத்து வரி கட்டுங்க..தவறினால் கட்டிடங்களுக்கு சீல் தான்” - சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை !

click me!