அயோத்தி தீர்ப்பு, பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்... நெட்டீசன்களிடம் கையெடுத்து கும்பிடும் பாமக நிறுவனர் ராமதாஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2019, 10:26 AM IST
Highlights

அதற்கு  எவர் ஒருவரும் இடம் கொடுத்து விடக் கூடாது. அது தான் நமது தாயகமான இந்தியாவை வலுப்படுத்தும். அயோத்தி வழக்கு தொடர்பாக அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது. முகநூல், வாட்ஸ்&ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அடுத்த சில நாட்களுக்கு சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதைக் கைவிட வேண்டும். காட்சி ஊடகங்களிலும் அயோத்தி நில தீர்ப்பு குறித்த விவாதங்களை தவிர்ப்பது நலம் பயக்கும். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எந்த ஒரு தரப்புக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல. அது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு நிலச் சிக்கலுக்கு முன்வைக்கப்படும் தீர்வாகவே பார்க்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு கிடைத்த ஒற்றுமையாகவே பார்க்கப்பட வேண்டும். 

அயோத்தி தீர்ப்பு அனைவரும்  ஏற்போம்,  எனவும்  இந்தியாவில் பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம்  தீர்ப்பளிக்கிறது. இந்தத் தீர்ப்பை அனைவரும் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அயோத்தி நில வழக்கு பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதிலும், ஓய்வுபெறவிருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் தான் 5 நீதிபதிகளைக் கொண்ட  அரசியலமைப்பு சட்ட அமர்வை  அமைத்து, 40 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி, அனைத்து தரப்பினரின் வாதங்களையும், நியாயங்களையும் கேட்டறிந்துள்ளார். இத்தகைய விசாரணைக்கு முன்பு கூட இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் நோக்குடன் நீதிபதிகள், மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்தார்.  அக்குழுவின் முயற்சி பயனளிக்காவிட்டாலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக இரு தரப்பினரும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தான் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது. 

வழக்கின் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் அதை மதித்து ஏற்றுக் கொள்ள இரு தரப்பினரும் தயாராகி விட்டனர் என்பதைத் தான் அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களை இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசியிருப்பது,  வழக்கின் தீர்ப்பை  அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் இந்து மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது அவர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய அணுகுமுறையாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல மாநிலங்களின் முதலமைச்சர்களும் இதே போன்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அயோத்தி நில வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் வரலாம். இரு சகோதரர்களுக்கு  இடையிலான சொத்து வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு எவ்வாறு அவர்களுக்கு இடையிலான உறவை சிதைத்து விடாதோ, அதேபோல் இந்த வழக்கின் தீர்ப்பும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவுக்கும், ஒற்றுமைக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது. அதற்கு  எவர் ஒருவரும் இடம் கொடுத்து விடக் கூடாது. அது தான் நமது தாயகமான இந்தியாவை வலுப்படுத்தும்.

அயோத்தி வழக்கு தொடர்பாக அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது. முகநூல், வாட்ஸ்&ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அடுத்த சில நாட்களுக்கு சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதைக் கைவிட வேண்டும். காட்சி ஊடகங்களிலும் அயோத்தி நில தீர்ப்பு குறித்த விவாதங்களை தவிர்ப்பது நலம் பயக்கும். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எந்த ஒரு தரப்புக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல. அது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு நிலச் சிக்கலுக்கு முன்வைக்கப்படும் தீர்வாகவே பார்க்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு கிடைத்த ஒற்றுமையாகவே பார்க்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் இந்த தீர்ப்பை முன்வைத்து சிறு அளவிலான மோதல்களும், வாக்குவாதங்களும் கூட நிகழாமல் இருப்பதை நாம் உறுதி செய்வோம். வாழ்க ஜனநாயகம்! வளர்க சகோதரத்துவம்!!

click me!