வட மாவட்டத்தில்கூட போனியாகாத பாமக? திவால் ஆன வாக்கு வங்கி!

By manimegalai aFirst Published Feb 24, 2022, 7:32 PM IST
Highlights

வன்னியர்களின்  வாக்குகளைப் பெறுவதற்கு இனி பாமக தேவையில்லை என்றும் பாமகவின் வாக்கு சதவிகிதத்தை திராவிட கட்சிகளே நன்கு புரிந்து வைத்துள்ளன என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். 
 


பாமக என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதாரமே வன்னியர்களின் வாக்கு வங்கிதான். அதை வைத்துதான் பல கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் பேரம் நடத்தி  அரசியில் செய்து வருகிறது பாமக. 1991ஆம் ஆண்டு முதல் தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு வரை  திமுக, அதிமுக, பாஜக என ஒவ்வொரு கட்சியுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது பாமக. தங்களது வட மாவட்ட செல்வாக்குகளையும் வன்னியர் ஓட்டுகளையும் காண்பித்து திமுக மற்றும் அதிமுகவிடம்  அதிகமான தொகுதிகள் கூடவே ராஜ்யசபா உறுப்பினர்கள், இன்னும் பலசில ஒப்பந்தங்களுடன் தேர்தலை சந்திப்பது பாமகவின் வாடிக்கை. மாறி மாறி கூட்டணி, சாதி அரசியல், தலித் விரோத போக்கு என எத்தனை அவதாரங்கள் எடுத்தும் எதிர்பார்த்த அளவுக்கு அந்த கட்சியால் வெற்றிபெற  முடியவில்லை. கட்சித் தொடங்கி கால் நூற்றாண்டு கடந்தும் சொந்த சாதி மக்களே தங்களை அங்கிகரிக்க வில்லையே எனற மனக்குமுறல் அக்கட்சி தலைமையிடம் உள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.  இதனையடுத்து 2019ஆம் ஆண்டு தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலிலும் அன்புமணி ராமதாஸ்  வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தர்மபுரியில் தோல்வி அடைந்தார். வன்னியர்களின் வாக்குகள் தங்களுக்கு தான் அந்நியர்களுக்கு இல்லை என்று கூறிவந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமனி ராமதாஸே  தங்களுக்கு செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் தோல்வியடைந்தது பாமகவின் வன்னியர் வாக்கு வங்கியை குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் 5 வார்டு உறுப்பினர்களையும், நகராட்சியில்  56 வார்டு உறுப்பினர்களையும், பேரூராட்சிகளில் 82 உறுப்பினர்களை மட்டுமே வென்றுள்ளது பாமக. வட மாவட்ட வன்னியர் வாக்கு பாமகவுக்கு மட்டம் அல்ல அது இன்னபிற கட்சிகளுக்கும் கிடைக்கும், ஏன் பாமகவுக்கு நேரெதிர் அரசியல் செய்யும் விடுதலை சிறுத்தைகளுக்கும் போகும் என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தல் உறுதி செய்தது. 

இந்தநிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், வன்னியர் வாக்கு வங்கியை வைத்து பேர அரசியல் செய்து வந்த பாமக இனி வரும் தேர்தல்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக  திராவிட கட்சிகளிடம் பேரம் பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அப்படியே பேசினாலும் ஒரு தொகுதி 2 தொகுதி மட்டுமே அவர்கள் கொடுப்பார்கள், ஏனெனில் அந்த அளவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியிடம் இருந்த  வன்னியர் வாக்குகள் அந்தளவுக்கு குறைந்துள்ளது. இதனை திமுகவும், அதிமுகவும் சரியாக புரிந்து கொண்டுள்ளன, வன்னியர் ஓட்டுக்கள் தங்களுக்கு மட்டுமே முழுமையாக கிடைக்கும் என நம்பி வந்த பாமகவிற்கு சொந்த மாவட்டங்களிலேயே இறங்கு முகமாக உள்ளது. வன்னியர்களின்  பிரதிநிதியாக தாங்கள்தான் என பாமக கூறி வந்தாலும், திமுவில் அமைச்சர் துரைமுருகனும், அதிமுகவில்  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வன்னியர்களின் ஓட்டுகளை பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

எனவே வரும் நாட்களில் வன்னியர் வாக்குகளைப் பெறுவதற்கு இனி பாமக தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பாமக குறித்து சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள கருத்து உண்மையா? அல்லது பாமக மீதான விமர்சனமா என்பது 2024ஆம் ஆண்டு ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரியும்.
 

click me!