
சென்னை மாநகரத்தில் ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றிருப்பது வெறும் தொடக்க தான், இனி போகப்போகத்தான் அவர்களின் சுயரூபம் தெரியுமென மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது இல்லை, அதிமுகவின் இடம் பாஜகவுக்கு கொடுக்கபடுகிறதா? அதற்கான ஆயத்த பணிகளை ஓபிஎஸ் இபிஎஸ் செய்கிறார்களா என்ற ஐயம் தோன்றுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் சட்டமன்றத்திற்கு நுழைந்துள்ளது அதிமுக. ஆனால் அதற்கு அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் வரலாறு காணாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது அதிமுக. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. 90 சதவீத இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 138 நகராட்சிகளில் 124ஐ திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தத்தில் அதிமுக துடைத்தெறியப்பட்டிருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் அதிமுக தொண்டர்களே ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையை விமர்சிக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. பலரும் எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர் அவர்களிடமிருந்து கட்சியை பாதுகாக்க சசிகலா தலைமைக்கு வர வேண்டும் என பேசி வருகின்றனர்.
இதற்கு முன்பு அதிமுக பல தேர்தல்களில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. ஏன் செல்வி ஜெயலலிதாவேகூட பர்கூர் சட்டமன்ற தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால் இதுவரை உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்த அளவிற்கு படுதோல்வியை அதிமுக சந்தித்ததில்லை. சென்னையில் படுதோல்வி, கோவை, சேலம் போன்ற பாரம்பரியமான, அதிமுக வலுவாக இருக்கும் மாவட்டங்களிலும் அக்கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் அது சுத்தமாக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் அதிமுக கூட்டணி இருந்து வெளியேறிய பாஜக அதிமுகவை காட்டிலும் சுமாரான வாக்குகளை பெற்று பல இடங்களில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 56 நகராட்சி வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. 230 பேரூராட்சி வார்டுகளிலும் வென்றுள்ளது. மாநகராட்சியில் மொத்தமாக 1.60 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
நகராட்சியில் 1.46 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தத்தில் பாஜக 3.27 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்னையில் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாவது இடம் பிடித்துள்ளது. சென்னையில் மொத்தம் ஒன்பது வார்டுகளில் பாஜக இரண்டாவது இடம் பிடித்துள்ளது, 134வது வார்டில் பாஜகவில் போட்டியிட்ட உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் மொத்தம் 200 வார்டுகளில் வெறும் 15 வார்டுகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது. பொதுவாக மக்கள் அதிமுகவை விட பாஜகவுக்கு 2வது இடம் வழங்கியுள்ளனர். இது அதிமுகவுக்கு ஆபத்தான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இது உண்மையிலேயே அதிமுக விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் என பல நடுநிலையாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இது தொடராக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்திருப்பதே ஆபத்தான அறிகுறிதான் என தெரிவித்துள்ளார்.
இனி மெல்ல மெல்ல அதிமுக வீழ்வதற்கான அறிகுறியே இது என எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- பெரிய அளவில் வன்முறை இல்லாத ஒரு தேர்தலாகவே நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடந்தது, ஆனால் இதில் கூட அதிமுக சந்தித்துள்ள தோல்விதான் அதிமுக எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. அந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இதை வேண்டுமென்றே செய்கிறார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. அதிமுகவை இபிஎஸ் ஓபிஎஸ் திட்டமிட்டு அழிக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது, தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் போதே அந்த பகுதியில் நிலவரம் என்ன என்று தெரியும், அதற்கு ஏற்ற வகையில் அவர்கள் வியூகத்தை மாற்றி அமைக்க முடியும், இதுவரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி பல தேர்தல்களை கையாண்டுள்ளனர். ஆனால் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்கள். இதுவரை அதிமுக பல தோல்விகளை சந்தித்துள்ளது, ஜெயலலிதா கூட தோல்வியை சந்தித்திருக்கிறார் ஆனால் இந்த அளவிற்கு ஒரு வீழ்ச்சியை சந்தித்தது இல்லை.
பல தேர்தல்களை நடத்திய ஓபிஎஸ் இபிஎஸ் இந்த தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் வேண்டுமென்றே அதிமுக இடத்தை பாஜகவுக்கு கொடுக்கிறார்களோ, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. பல இடங்களில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, இது மோசமான அறிகுறி, சென்னை போன்ற ஒரு மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றிருப்பது வெறும் தொடக்கம்தான், இதை வைத்துக்கொண்டு அவர்கள் என்னென்ன பிரச்சினையை எழுப்ப போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும். மொத்தத்தில் பாஜகவின் சாதி மத மற்றும் பிரித்தாலும் அரசியல் சென்னை மாநகராட்சியில் எடுபட்டுள்ளது என்பதையே பாஜகவின் ஒரு வார்டு வெற்றி காட்டுகிறது. திமுக vs அதிமுக என்ற ஒரு நிலை மாறி திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலை உருவாகும் சூழல் தொடங்கிவிட்டது. இப்போது இருக்கிறவர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ்தான் இவர்கள் ஜெயலலிதாவோ அல்லது எம்ஜிஆரோ அல்ல.
அதனால் அதிமுகவுக்கு சசிகலா, டிடிவி தினகரன் போன்றவர்களின் தலைமை தேவைப்படுகிறது. அது போன்ற தலைவர்கள் இருந்தாலாவது குறைந்தபட்சம் இது போன்ற சூழ்நிலைகளை தடுக்க முடியும் தவிர்க்க முடியும். திமுகவுக்கு ஒரு வலுவான அதிமுக தேவை, திமுக vs அதிமுக என்ற நிலை மாறி, திமுக vs பூஜ்ஜியம் அதிமுக என்ற நிலை ஏற்பட்டு அடித்தடுத் தேர்தல்களில் திமுக vs ...? என்ற நிலைமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.