வன்னிய சமுதாயத்தின் பின்தங்கிய நிலை தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை பின்னுக்கு இழுக்கின்றன என்பதை இதன்மூலம் உணரலாம். - பாமக நிறுவனர் ராமதாஸ்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10. 50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது; உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டியது என்பதை கடந்த மே 8ம் நாள் வெளியிடப்பட்ட 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மெய்ப்பித்திருக்கின்றன.
அதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடைமுறை தொடங்கி விட்ட நிலையில், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தக் கோருவதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் நாள் வெளியிடப்பட்டன.
தேர்ச்சி விகிதங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களை பட்டியலிட்டால், அவற்றில் கடைசி 15 இடங்களைப் பிடித்த ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றைத் தவிர மீதமுள்ள 12 மாவட்டங்களும் வட தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும்.
இவற்றையும் கடந்து இதில் தெரியவரும் இன்னொரு செய்தி என்னவென்றால், அனைத்து வட மாவட்டங்களுமே கடைசி 15 இடங்களில் தான் வந்திருக்கின்றன என்பது தான்; முதல் 20 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் ஒன்று கூட வட மாவட்டங்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் சராசரி தேர்ச்சி 94. 05 விழுக்காடு ஆகும். வட மாவட்டங்களில் ஒன்று கூட இந்த சராசரியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தலைநகரமான சென்னையுடன் இணைந்திருந்தாலும் அவற்றால் சராசரி மதிப்பெண்களை எட்ட முடியவில்லை; கடைசி 15 இடங்களுக்கு மேலாக முன்னேற முடிய வில்லை. இவற்றுக்கான காரணங்களை ஆராயத் தேவையில்லை; அனைவரும் அறிந்தவை தான். பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடிப்பது இப்போது தான் நடக்கும் நிகழ்வு அல்ல.
இதையும் படிங்க..3 முறை எம்.எல்.ஏ.. திமுக ஐடி விங்கின் ‘மாஸ்டர் மைண்ட்’ - யார் இந்த டி.ஆர்.பி ராஜா?
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 1980ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கடந்த 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடித்ததற்கு காரணம், அம்மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையும் விட முதன்மையான காரணம் வட மாவட்ட மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியர்களும், பட்டியல் சமுதாயத்தினரும் தான்.
வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர் சமுதாய மக்களால் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில் தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை. மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மாணவர்களால் காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டுத் தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்.
அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாழ்வாதாரப் பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது. அதனால் தான் அவர்களும் தேர்வில் தோல்வியடைந்து, மாவட்ட தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் காரணமாகின்றனர். வன்னியர்களின் கல்வி மற்றும் சமூக நிலை மிக மோசமாக இருக்கிறது என்பதற்கு இதை விட வலிமையான சான்றுகள் தேவையில்லை. இதை இன்னொரு சான்றின் மூலமாகவும் மெய்ப்பிக்க முடியும்.
தேர்ச்சி விகிதத்தில் கடைசி 15 இடங்களில் வட மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களும் வட தமிழகத்தைச் சேர்ந்தவை இல்லை என்றாலும் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும். வன்னிய சமுதாயத்தின் பின்தங்கிய நிலை தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை பின்னுக்கு இழுக்கின்றன என்பதை இதன்மூலம் உணரலாம். கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றில் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால், அதற்கு வன்னியர்களின் கல்வி, சமூக நிலை மேம்பட வேண்டும்.
அதற்கு மிகவும் விரைவாக வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை இத்தருணத்தில் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கல்வியில் மட்டுமின்றி, பிற காரணிகளிலும் வட மாவட்டங்களின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளது. தமிழகத்தில் மிக அதிக அளவில் மது விற்பனையாவது வட தமிழகத்தில் தான். தமிழகத்திலேயே மிக அதிக அளவில் குடிசைகள் இருப்பதும் இந்த மாவட்டங்களில் தான்.
இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழ்நாடு மாநில பிரிவில் (கேடர்) நேரடியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை; 2020ம் ஆண்டில் தான் முதன்முறையாக வன்னியர் ஒருவர் தமிழ்நாடு பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், தமிழகத்தில் இன்றைய நிலையில் அரசுத்துறை செயலாளர் மற்றும் அதற்கும் கூடுதலான நிலையில் 118 இ. ஆ. ப. அதிகாரிகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது கவலையளிக்கும் உண்மை. அதேபோல், காவல்துறையில் காவல்துறை தலைவர் (ஐ. ஜி) நிலை மற்றும் அதற்கு மேலான பதவிகளில் ஒருவர் கூட வன்னியர் கிடையாது” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.
இதையும் படிங்க..உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த மாதம் ரூ.436 எடுக்கப்படும்.. ஏன், எதற்கு தெரியுமா? முழு விபரம்