
திமுக தலைவர் ' கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றதில் மகிழ்ச்சி என்றும் விரைவில் முழு உடல்நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும். வாழ்த்துகள் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டு காலமாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
இதனிடையே சென்னையில் முரசொலி பவள விழா கண்காட்சி கடந்த அக்.10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க இயலாத வகையில், கருணாநிதி உடல்நிலை மோசமாக இருந்ததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி, அவர் வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தார்.
இதைதொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நேற்று திடீரென சென்றார்.
கடந்த ஓர் ஆண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார்.
கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார். அவருடன் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ' கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றதில் மகிழ்ச்சி என்றும் விரைவில் முழு உடல்நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும். வாழ்த்துகள் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.