யாரை நம்பக் கூடாதென கருணாநிதி சொன்னார்.? அடுத்தடுத்து பூடாகமாக பதிவுகளை வெளியிட்டு குழப்பும் டாக்டர் ராமதாஸ்!

By Asianet TamilFirst Published May 27, 2020, 9:36 PM IST
Highlights

“திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
 

யாரை நம்பக் கூடாது என்று கருணாநிதி தன்னிடம் சொன்னதாக நேற்று தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இன்று எந்தக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றி கருணாநிதி குறிப்பிடவில்லை என்று இன்று இன்னொரு ட்வீட் வெளியிட்டு குழம்ப வைத்துள்ளார்.

 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இயங்கக்கூடியவர். உலக நடப்புகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் ட்விட்டரில் தெரிவித்துவிடுவார். இந்நிலையில் நேற்று பூடாகமாக ஒரு ட்விட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். அதில், “திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அந்தத் தலைவர் யார் என்பது பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பலரும் பல தலைவர்களின் பெயர்களைப் பதிவிட்டு, அவரைப் பற்றிதான் கருணாநிதி கூறியிருப்பார் என்று தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் நேற்று வெளியிட்ட பூடாகமான ட்விட்டர் பதிவுக்கு இன்னொரு பூடாகப் பதிவை இன்று டாக்டார் ராமதாஸ் வெளியிட்டார். அதில், “இந்த பதிவுக்கான பின்னூட்டத்தில் பலரும் பல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், கலைஞர் குறிப்பிட்டது அதிமுக, திமுக, திக, மதிமுக, தேமுதிக, பாஜ௧, காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், விசிக, ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல!” என்று தெரிவித்துள்ளார்.


பல கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அக்கட்சி தலைவர்களைப் பற்றி கருணாநிதி கூறவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளது மீண்டும் பலரையும் குழப்ப வைத்துள்ளது. அதேவேளையில் பாமகவைப் பற்றி குறிப்பிடாததால், டாக்டர் ராமதாஸ்தான் அது எனக் கிண்டலாகவும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.   

click me!